Friday 30 September 2016

கஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல் எப்படி நடந்தது? அது போரைக் கொண்டுவருமா?

இந்திய கஷ்மீரில் எல்லை தாண்டிச் சென்று செய்த தாக்குதல் சிறியதென்றாலும் அது உலகிலேயே மிகவும் பிரச்சனைக்குரிய எல்லையில் செய்த தாக்குதலாகும். உளவாடல் தகவல் திரட்டல் திட்டமிடல் இரகசியம் பேணல் வேவுபார்த்தல் இரகசியமான ஊடுருவல் ஆகியவற்றை இந்தியப் படையினர் திறம்படச் செய்துள்ளனர். அதையும் ஆளணி இழப்பு ஏதும் இன்றிச் செய்துள்ளனர். பாக்கிஸ்த்தானின் உளவாடலிலும் வேவுபார்த்தலிலும் மோசமாகக் கோட்டை விட்டுள்ளது. செய்த தாக்குதல் ஓர் அறுவைசார் நடவடிக்கை (Surgical Operation) என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Surgical Operation என்பது தெரிவு செய்யப்பட்ட இலக்கு மீது இலக்கிற்கு மட்டும் சேதம் விளைவிக்கக் கூடிய தாக்குதலாகும். அத்துடன் எந்தவித (Collateral Damage) பக்கவிணைச் சேதாரங்களையும் ஏற்படுத்தாது. 

எரியும் கஷ்மீர்
2016 ஜூலை மாதம் கஷ்மீர் ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவரான புர்ஹான் வானி என்பவரை இந்தியப் படையினர் கொன்ற பின்னர் இந்தியா ஆக்கிரமித்துள்ள கஷ்மீரில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதற்கு எதிராக இந்தியப் படையினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். பரவலான ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன. கஷ்மீர் மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாக்கப் பட்டனர். அரச இயந்திரம் செயற்பட முடியாத நிலையில் பெருமளவு இந்தியப் படையினர் களமிறக்கப்பட்டனர். இந்தியப் படையினர் ரப்பர் குண்டுகளை சிறுவர்கள் முகங்களை நோக்கிச் சுட்டு பலரைப் பார்வை இழக்க்ச் செய்தனர்.   இந்துத்துவா பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள மக்கள் மக்களாட்சிக் கட்சியின் கஷ்மீர் மாநில அரசு மீதான மக்களின் நம்பிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. இந்திய நடுவண் அரசு மீதான கஷ்மீர் மக்களின் நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்தது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களை இஸ்லாமியத் தீவிரவாதிகளாகவும் பாக்கிஸ்த்தானின் கைக்கூலிகளாகவுமே இந்தியத்தரப்பில் இருந்து பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊறியில் இந்திய முகாம் மீது பாக்கிஸ்த்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு முன்னர் 2016 ஜனவரி மாதம் கஷ்மீரில் செயற்படும் ஐக்கிய ஹிஹாத் சபை என்னும் அமைப்பு கஷ்மீரில் உள்ள இந்தியாவின் பதாங்கொட் விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி இந்திய விமானப் படையைச் சேர்ந்த மூவரைக் கொன்றனர். 

தாக்குதல் சட்டபூர்வமானதா?
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்தியா எல்லை தாண்டிச் சென்ற படை நடவடிக்கை பன்னாட்டு நியமங்களுக்கு இசைவானதாகக் கருதப்படுகின்றது. இந்தியா பல தடவைகள் பாக்கிஸ்த்தானிற்கு அங்கு செயற்படும் தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களையும் எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தது. அதற்கு ஏற்ப பாக்கிஸ்த்தான் நடவடிக்கை எடுக்காதவிடத்தில் இந்தியாவிற்கு ஒரு படை நடவடிக்கை எடுக்கும் முகாந்திரம் உண்டு.

இலக்குத் தெரிவு
இந்தியப் பாதுகாப்புத் துறையினர் தமது நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் பாதைகளையும் அவர்களது நடமாட்டங்களையும் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் இருப்பிடங்களை அறிந்து கொண்டனர். இந்திய உளவுத்துறையினரையும் இந்தியாவின் செய்மதி அவதானிப்பு நிபுணர்களையும் படையினர் இதற்குப் பயன்படுத்தினர். இதன் மூலம் தாம் தாக்குதல் செய்ய வேண்டிய பாய்ச்சுதல் திண்டுகளை () அவர்கள் இனம் கண்டு கொண்டனர். அவற்றில் இறுதியில் நான்கு இடங்களை தெரிவு செய்து தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். அவை Bhimber, Hot Springs, Leepa and Kel ஆகும். தெரிவு செய்யப் பட்ட நான்கு வீச்சுத் திண்டுகள் (Launch Pads) இடங்களில் இருந்து இந்தியாமீது தாக்குதல் நடக்கவிருக்கின்றது என்ற நிலை வரும்போது மட்டுமே அவற்றின் மீது தாக்குதல் செய்யவும் என இந்திய அரசு படையினருக்கு உத்தவிட்டது. இதனால் அந்த நான்கு இலக்குகளும் செய்மதிகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. பல நாடுகள் இந்தியாவின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரான்ஸ் படைத்துறையில் உதவி செய்யவும் முன்வந்துள்ளது. 

இரகசியம்
தாக்குதல் திட்டம் பற்றி பிராந்தியத் தளபதிகளுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இறுதியில் எல்லையோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் அறிவிக்கப் பட்டது. உளவுத் துறையினரும் செய்மதித் துறையினரும் Bhimber, Hot Springs, Leepa and Kel ஆகிய நான்கு வீச்சுத் திண்டுகளிலும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். தாக்குதலுக்கான இறுதி முடிவு 2016 செப்டம்பர் மாதம் 27-ம் திகதி செவ்வாய்க் கிழமை எடுக்கப்பட்டது. இந்தியாவின் 19படைப்பிரிவிலும் 25படைப்பிரிவிலும் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட படைவீரர்கள் தாக்குதல் நடப்பதற்குப் பலநாட்களுக்கு முன்னராகவே அழைக்கப்பட்டு அவர்களுக்குப் பயிற்ச்சிகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் வட முனைப் படைத் தளபதி தாக்குதலுக்கான தளபதியாக நியமிக்கப்பட்டார். ஊரித் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியத் தரைப் படைத்துறையின் உச்ச தளபதியான ஜெனரல் தல்பிர் சிங் சுஹாக் வடமுனை கட்டளைப் பணிமனைக்குச் சென்றிருந்தார். 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் திகதி நள்ளிரவு கடந்து 30 நிமிடங்களுக்குப் பின்னர் அதாவது வியாழன் அதிகாலை 00-30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது. தாக்குதலை அடுத்து பாக்கிஸ்த்தான் பதில் தாக்குதலை மேற்கொண்டால் அதற்கு தயாரான நிலையில் இருக்கும் படி புதன்கிழமைதான் பல பிராந்தியத் தளபதிகளுக்கு கட்டளை வழங்கப்பட்டது. இந்திய பாக்கிஸ்த்தான் எல்லையில் முப்படையினரும் உச்ச விழிப்புடன் இருக்கும் படி உத்தரவிடப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட சிறப்புப் படையினர் கட்டுப்பாட்டு எல்லையில் பரசூட் மூலம் இறக்கப் பட்டனர். அவர்கள் நான்கு பிரிவுகளாகச் செயற்பட்டனர். நான்கு இலக்குகளையும் தாக்குவது அவர்களது பணியாகும். மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை அவர்கள் பயணித்து தாக்குதல்களை மேற்கொண்டனர். அவர்களுக்கு உழங்கு வானூர்திகள் துணையாகச் சென்றன. இரண்டு பாக்கிஸ்த்தானியப் படையினர் கொல்லப்பட்டதுடன் முப்பது தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பிரிஐ தெரிவிக்கின்றது. 

பாக்கிஸ்த்தானின் மறுப்பு
இந்தியப் படையினர் எல்லை தாண்டிச் சென்றதை பாக்கிஸ்த்தானியப் படையினர் கடுமையாக மறுத்துள்ளனர். அது இந்தியாவால் புனையப்பட்ட புளுகுக் கதை என்றனர். இந்தியா ஒரு எறிகணைத் தாக்குதலைத் தொடங்கியது. பின்னர் இருதரப்பினரும் செய்த எறிகணைத் தாக்குதலில் இரு பாக்கிஸ்த்தானியப் படையினர் கொல்லப் பட்டதாகவும் பாக்கிஸ்த்தான் சொன்னது. ஆனால் இந்த தாக்குதலுக்கு பாக்கிஸ்த்தானின் மிக உயர் மட்டத்தில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பிந்திக் கிடைத்த செய்தி: ஒரு இந்தியப் படை வீரரை பாக்கிஸ்த்தான் கைப்பற்றி வைத்துள்ளது.

ஐயப்படும் தி டிப்ளோமட் ஊடகம்
இந்தியாவிடம் ஓர் அறுவைசார் நடவடிக்கை (Surgical Operation) செய்யும் திறன் இருக்கின்றதா என்பதில் ஐயம் உள்ளதாக தி டிப்ளோமட் என்னும் ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவிடம் துல்லியமாகத் தாக்கும் வழிகாட்டல் ஏவுகணைகள் இல்லை என்கின்றது அது. இந்தியாவிடம் இரசியாவிடமிருந்து வாங்கிய GPS guided munition called the Krasnopol மட்டும்தான் இருக்கின்றது. தரைவழி அல்லது உழங்குவானூர்தி வழி அறுவைசார் படை நடவடிக்கை செய்வதற்கு கஷ்மீர் உகந்த இடமல்ல எனவும் தி டிப்ளோமட் ஊடகம் சொல்கின்றது. செய்த தாக்குதல் காணொளிப் பதிவு செய்யப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. ஆனால் தாக்குதல் விபரம் வெளிவிடப்படவில்லை. அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்த பாக்கிஸ்த்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரில் இந்தியா தாக்குதல் செய்ததாகக் சொல்லப்படும் இடங்களைச் சூழவுள்ள மக்கள் தாம் எந்த ஒரு கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடல்களையும் காணவில்லை என்றும் எங்கும் பொரு இறப்பு இறுதி நிகழ்வுகள் நடக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இது மோடியின் பரப்புரை நாடகமா என்ற கேள்வியும் அதில் எழுப்பப்பட்டுள்ளது. கஷ்மீரில் இந்தியா எழு இலட்சம் படையினரையும் பாக்கிஸ்த்தான் இரண்டு இலட்சம் படையினரையும் நிறுத்தியுள்ளன. இருதரப்பினருக்கும் இடையிலான எல்லைப் பகுதி உலகிலேயே மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் பிரதேசமாகும். அதில் எல்லை தாண்டிப்போய் தாக்குதல் நடத்துவது என்பது இயலாத காரியம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பல தடவைகள் பாக்கிஸ்த்தானில் இருந்து தீவிரவாதிகள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கின்றனர். இந்தியப் படைகளும் பல தடவை எல்லை தாண்டிச் சென்று இரகசியத் தாக்குதல்கள் செய்கின்றது. 

பாக்கிஸ்த்தான் பொத்திக்கிட்டு இரு
தாக்குதல் முடிந்ததும் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அதுபற்றி அறிவிக்கப்பட்டது. மேலும் படை நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என அமெரிக்கப் படைத்தரப்பில் இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டது. பாக்கிஸ்த்தானைப் பொத்திக் கொண்டு இருக்கும்படி அமெரிக்கா மூலம் பணிப்பு விடுக்கவே அமெரிக்காவிற்குத் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். பதில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அமெரிக்கா பாக்கிஸ்த்தானிடம் தெரிவித்திருக்கும் என ஊகிக்க யாரும் ஒரு விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்றில்லை.

கேரளக் கோழிக் கூட்டில் மோடியின் சவால்
கேரள நகரான கோழிக்கூட்டில் நரேந்திர மோடி உரையாற்றிய போது வேலையில்லப் பிரச்சனை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, கல்வியறிவின்மை ஒழிப்பு ஆகியவற்றில் இந்தியாவுடன் போட்டியிடும் படி பாக்கிஸ்த்தானுக்கு சவால் விட்டார். ஊறித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்காமல் மோடி இப்படிப் பேசுகின்றார் என்ற கண்டனம் பல தரப்பில் இருந்தும் எழுந்தது.  

கேந்திரோபாய தடை - strategic restraint
2012-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் இருந்து ஊடுருவியதாகக் கருதப்படும் தீவிரவாதிகள் இந்தியப் படையினரை தலைகளை வெட்டிக் கொலை செய்தனர். அதற்கு முன்னர் 2008-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் இருந்து திவிரவாதிகள் படகு மூலம் மும்பாய் சென்று தாக்குதல் நடத்தினர். அப்போதெல்லாம் இந்தியா கேந்திரோபாய தடையக் (strategic restraint) கடைப்பிடித்தது. அப்போது பாக்கிஸ்த்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பல கண்டனங்கள் எழுந்தன. இந்தத் தாக்குதல் மிகவும் காலம் கடந்ததும் காத்திரமற்றதுமான ஒரு தாக்குதல் என்ற குற்றச்சாட்டு வரத் தவறவில்லை. இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கென்றே லக்சர் இ தொய்பா, லக்சர் இ ஜங்வி ஆகிய தீவிரவாத அமைப்புக்கள் பாக் அரசின் உதவியுடன் செயற்படுவதாக நம்பப்படுகின்றது. 

அரசுறவியல் தனிமைப்படுத்தல்
அண்மைக்காலங்களாக பாக்கிஸ்த்தானை அரசுறவியல் ரீதியில் தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பாக்கிஸ்த்தான் மீது இந்தியா கடும் வார்த்தைகளைப் பாவித்துத் தாக்குதல் நடத்தியது. பாக்கிஸ்த்தானில் நடக்கும் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கப் போவதாக அறிவித்தது அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்த்தான் பூட்டான் பங்களாதேசம் ஆகிய நாடுகளும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன. இதனால் 2016 நவம்பரில் பாக்கிஸ்த்தானில் நடக்க விருக்கும் தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஒத்தி வைக்கப்படலாம் என அஞ்சப் படுகின்றது. வல்லரசு நாடுகளுடன் இந்தியா தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு பாக்கிஸ்த்தான் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் செய்யும் தீவிரவாதிகளை வளர்த்து வருவதாகத் தெரிவித்து அதற்கு எதிரான தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோரி வருகின்றது. ஏற்கனவே சில நாடுகள் இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்கும் படி பாக்கிஸ்த்தானுக்குத் தெரிவித்துள்ளன.
 


இரு இனக்கொலையாளிகள்
இந்திய ஆக்கிரமிப்பில் உள்ள கஷ்மீரில் 1989-ம் ஆண்டின் பின்னர் 92,000 பேருக்கு மேல் இந்தியப்படையினரால் கொல்லப்பட்டனர். பாக்கிஸ்த்தானில் ஆண்டு தோறும் ஐநூறுக்கு மேற்பட்ட சியா இஸ்லாமியர்கள் கொல்லப்படுகின்றனர். இரு நாடுகளும் ஈழத்தில் நடந்த இனக்கொலைக்கு உதவி செய்து கொண்டிருக்கும் நாடுகளாகும். 

போர் வருமா
இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நேர வெடி குண்டுகளாகும். அமெரிக்காவும் இரசியாவும் ஒன்றன் மீது ஒன்று அணுக்குண்டு வீசுவதற்கான வாய்ப்புகளிலும் பார்க்க பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் ஒன்றின் மீது ஒன்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். பாக்கிஸ்த்தானை இப்போது அடக்காவிடில் எப்போதும் அடக்க முடியாது என இந்தியப்படையினர் கருதுகின்றனர். 2008-ம் ஆண்டே அரபிக் கடல் ஓரமாக பாக்கிஸ்த்தான் மீது ஒரு கடல் முற்றுகையைத் தொடுத்து அதன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை இந்தியப் படையினர் முன் வைத்தனர். அரசியல்வாதிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது உள்ள பாரதிய ஜனதா அரசு காங்கிரசு அரசிலும் பார்க்க பாக்கிஸ்த்தான் மீது அதிக வன்மம் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல இந்தியப் படையினர் செய்த அறுவைசார் படை நடவடிக்கை பற்றி இனி பாரதிய ஜனதாக் கட்சியினர் அதிகம் பெருமைப் பரப்புரை செய்யும் போது அது பாக்கிஸ்த்தானிய மக்களை ஆத்திரமூட்டச் செய்யும். இந்தப் பரப்புரையும் ஆத்திரமூட்டலும் பாக்கிஸ்த்தானியப் படையினரை பதிலடி கொடுக்கத் தூண்டலாம். அது பெருமைப் பரப்புரைச் செய்யும் பாரதிய ஜனதாக் கட்சியினரின் ஆணவத்தின் மீதான அடியாக விழும் போது ஒரு போர் உருவாகும் ஆபத்து உண்டு.

Monday 26 September 2016

இடியப்பச் சிக்கலான லிபியப் பிரச்சனை

லிபிய நாடாளமன்றத்தின் மூன்று உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் லிபியக் கசாப்புக் கடைக்காரர் என்றார். லிபியாவில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு அவர் பின்னணியில் இருக்கின்றார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஐ எஸ் அமைப்பினரால் படுகொலை செய்யப் படும் டவகா என்ற இனக்குழுமத்தின் பிரதிநிதிகளே ஹிலரி மீது இக்குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். லிபிய உள்நாட்டுக் குழப்பத்தால் டவகா இனக்குழுமத்தினர் எல்லோரும் வீடிழந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியப் போராளிகள் ஆயிரக்கணக்காக பெண்களைக் கொடுமைப் படுத்துகின்றார்கள். பல்லாயிரக் கணக்கானவர்களைச் சிறைப்பிடித்து வைத்துள்ளார்கள். இஸ்லாமியப் போராளிகள் அப்பாவிகளைப் பெருமளவில் சிறை வைத்திருக்கும் மிஸரட்டா நகருக்கு ஹிலரி கிளிண்டன் பல தடவைகள் பயணம் மேற்கொண்டிருந்தார் எனக் குற்றம் சாட்டுகின்றார் டவகா இனக்குழும நாடாளமன்ற உறுப்பினர் ஜபல்லா அல் ஷிபானி. திரிப்போலியையும் லிபிய எரிபொருள் வளங்களையும் கட்டுப்படுத்துவதற்காக ஹிலரி இப்போதும் பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பில் இருக்கின்றார் எனவும் அவர் குற்றம் சாட்டுகின்றார். 


மோசமான நிலைமை
ஈராக்கிலும் சிரியாவிலும் இருந்து ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசின் உயர் மட்டத்தலைவர்கள் பலர் தற்போது லிபியாவின் சேர்ட் நகரிற்கு நகர்ந்துள்ளார்கள். அந்த அளவிற்கு லிபியாவில் நிலைமை மாறியுள்ளது. லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாஃபி பிறந்த நகரான சேர்ட் 2015-ம் ஆண்டு மே மாதம் ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. மத்திய தரைக் கடலின் ஓரத்தில் அமைந்துள்ள சேர்ட் நகரைக் கைப்பற்றினால் அங்கிருந்து ஐரோப்பா மீதான தாக்குதலுக்கு வசதியாக அமையும் என்பது அவர்கள் நோக்கமாக இருந்தது. படையணி-166 என்ற போராளிக்குழுவிடமிருந்து ஐ எஸ் அமைப்பினர் சேர்ட் நகரைக் கைப்பற்றினர். சிரியாவில் இரண்டு நாடாளமன்றங்களும் மூன்று அரசுகளும் இருக்கின்றன. ஐரோப்பாவில் தஞ்சம் கோர வட ஆபிரிக்காவில் இருந்து செல்வோர் லிபியாவினூடாகவே செல்கின்றனர். அதனால் லிபியாவில் ஒரு தஞ்சம் வழங்கல் பணிமனை அமைத்து அங்கிருந்து தஞ்சக் கோரிக்காயாளர்களைக் கையாள் வேண்டும் என்றார் ஹங்கேரியின் தலைமை அமைச்சர் விக்டர் ஓர்பன். 

ஐ எஸ் அமைப்பினரின் அதிரடியான லிபிய நுழைவு
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் திர்ப்போலியில் ஓர் உல்லாச விடுதி மீது தாக்குதல் செய்து ஓர் அமெரிக்கர் உட்பட ஒன்பதுபேரை இஸ்லாமிய அரசு அமைப்பினர் கொன்றதைத் தொடர்ந்தும் பெப்ரவரி மாதம் எகிப்திய கொப்ரிக் கிருத்தவர்கள் 21பேரை ஐ எஸ் அமைப்பினர் லிபியாவில் தலைகளை வெட்டிக் கொன்றதைத் தொடர்ந்தும் ஐ எஸ் அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் மட்டுமல்ல லிபியாவிலும் தன்னை விரிவுபடுத்தியுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து லிபியாவில் எகிப்திய விமானங்கள் ஐ எஸ் இலக்குகள் மீது குண்டு வீசின. இரண்டாயிரம் வரையிலான ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளூம் படைக் குழுக்களைக் கொண்ட லிபியாவில் சிறு நிலப்பரப்பு மட்டுமே ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அமெரிக்க ஆதரவு படைக்குழுக்கள் சேர்ட் நகரின் பல பகுதிகளில் இருந்து ஐ எஸ் அமைப்பினரை விரட்டினர். லிபியப் பெற்றோலிய வசதிப் பாதுகாப்புப் படை (Libyan Petroleum Facilities Guard) என்னும் போராளிக் குழுவும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்துகின்றனர். லிபியத் தேசியப் படை என்ற போராளிக் குழு ஐ எஸ் சார்பானது எனச் சொல்லி அவர்கள் மீதும் லிபியப் பெற்றோலிய வசதிப் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். அல் கெய்தாவின் கிளை அமைப்பான அன்சர் அல் ஷரியா என்னும் போராளிக் குழு பெங்காசி, டொப்ருக், டெர்னா, சப்ராத்தா ஆகிய பிரதேசங்களில் வலுவுடன் இருக்கின்றது. அன்சர் அல் ஷரியா அமைப்பு மற்ற இஸ்லாமியவாத அமைப்புக்களுடன் இணைந்து பெங்காசி புரட்சிகர ஷ்ரா சபை (Benghazi Revolutionaries Shura Council) என்னும் குடை அமைப்பை உருவாக்கியுள்ளது.

தீர்க்க முடியாத ஐநா சபை
லிபியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத் தூதுவர் பெர்ணாடினோ லியோன் (Bernardino Leon) மிகவும் சர்ச்சைக்கு உரியவராகி இருக்கின்றார். ஒரு நாட்டில் பிரச்சனை என்றால் அல்லது நாடுகளுக்கிடையில் பிரச்சனை என்றால் ஐநா சபை ஒரு சமாதானத் தூதுவரை நியமிக்கும். அவருக்கு கொழுத்த சம்பளம் வழங்கப்படுவதுடன், உல்லாசமான விமானப் பயணம், உல்லாச விடுதிகளில் தங்கல் எனப் பலவற்றை அவரால் அனுபவிக்க முடியும். அவர்கள் சமாதான் பேச்சு வார்த்தையை உள்நாட்டில் செய்து பார்ப்பார்கள் பின்னர் அது சரியில்லை என்று சொல்லி ஜெனிவாவில் அல்லது ஏதாவது உல்லாச நகர்களில் பேச்சு வார்த்தைக்கு ஒழுங்கு செய்வார்கள். ஜெனீவா என்பது பன்னாட்டு அரசுறவியலாளர்களுக்கு மிகவும் பிடித்த இடம். உலகிலேயே ஊழல் நிறைந்ததாகவும் மோசமான முகாமைத்துவம் கொண்டதாகவும் ஓர் அமைப்பு இருக்கின்றதென்றால் அது ஐநா சபைதான் என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. ஐநாவின் சிரியாவிற்கான சமாதானத் தூதுவராக நியமிக்கப் பட்ட முன்னாள் ஐநா பொதுச் செயலர் கோஃபி அனன் சில மாதங்களில் தனது பதவியை துறந்தார். பதவி விலகும் போது ஐநாவின் நிரந்தர உறுப்புரிமையுள்ள நாடுகளான வல்லரசுகள் மீது அவர் குற்றம் சாட்டினார். ஆனால் அவருக்குப் பின்னர் சிரியாவிற்கான ஐநா தூதுவராகப் பதவியேற்ற அல்ஜீரியர அரசுறவியலாளர் அல் அக்தர் பிராமி 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் அங்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் பதவியில் இன்று வரை ஒட்டிக் கொண்டே இருக்கின்றார்.

பெர்ணாடினோ லியோன்  தொட்ட இடம் துலங்கும்
லிபியாவிற்கான ஐநா சமாதானத் தூதுவரான ஸ்பானிய நாட்டு அரசுறவியலாளர் பெர்ணாடினோ லியோன் மிகவும் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றார் என்பது அவர் ஐக்கிய அமீரகத்தின் மன்னருக்கு எழுதிய மின்னஞ்சல் அம்பலமான போது தெரிய வந்துள்ளது. இவர் தொட்ட இடம் துலங்கும் என்பதற்கு இவர் முன்னர் ஆப்கானிஸ்த்தான், ஈராக் ஆகிய நாடுகளுக்கு ஐநாவின் சிறப்புத் தூதுவராக இருந்தமையே சான்று. லிபியாவில் நடந்த தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப் பட்ட நாடாளமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு சாதகமாக இல்லாதபடியால் ஐநா சபை லிபியாவில் ஓர் அரசைத் திணிக்க முயன்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.


நரியூருக்கு அஞ்சி புலியூருக்குப் போன கதை
நாற்பது ஆண்டுகள் சிரியாவில் ஆட்சியில் இருந்த மும்மர் கடாஃபி 2011-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொல்லப்பட்ட பின்னர் லிபியாவின் பெரும் குழப்ப நிலை உருவானது. படைக்கலன்கள் ஏந்திய பல தரப்பட்ட குழுக்கள் தமக்கு என பிராந்தியங்களைக் கைப்பற்றிக் கொண்டன. லிபியா படைக்கலன்கள் களவாக விற்பனை செய்வதற்குப் பிரபலமான நாடாகியது. இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைகளுக்கு வலிமை மிக்க படைக்கலன்கள் முக்கியமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போய்ச் சேராமல் இருக்க அமெரிக்கா பெரு முயற்ச்சி எடுத்தது. சதாம் ஹுசேயினை ஆட்சியில் இருந்து அழிக்கும் போது அவரது படையினரை அமெரிக்கா அழித்து ஒழித்தது. அதனால் சதாமிற்கு பின்னர் ஒரு திடமான அரசை ஈராக்கில் அமெரிக்காவால் உருவாக்க முடியாமல் போனது. அதனால் கடாஃபியை ஆட்சியில் இருந்து அகற்றும் போது அவருக்கு நெருக்கமானவர்களைத் தவிர ஏனைய படையினர் உயிருடன் இருப்பதை அமெரிக்கா உறுதி செய்து கொண்டது. ஆனால் நூற்றி நாற்பதிற்கும் மேற்பட்ட இனக் குழுமங்களை கொண்ட லிபியாவை கடாஃபி உலகிலேயே சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகள் கொண்ட ஆட்சி மூலமும் அடக்கு முறை மூலமும் ஒன்றுபடுத்தி வைத்திருந்தார். கடாஃபியின் ஆட்சியின் கீழ் இலவச மின்சாரம் பெற்ற லிபியர்கள் பலர் தற்போது மின்சார வசதி இன்றி இருக்கின்றார்கள். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மின்சாரம் இல்லாததால் வாகனங்கள் மைல் கணக்கில் நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்குக் காத்திருக்க வேண்டியுள்ளது. சிலர் அயல்நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிபொருளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றார்கள்.

தீர்வு தராத தேர்தல்
2014-ம் ஆண்டு லிபியாவில் நடந்த பாராளமன்றத் தேர்தலில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு தலைமையிலான லிபிய உதயம் குழுவினர் தோல்வியடைந்த போதிலும் லிபியத் தலைநகர் திரிப்போலியைத் தம் வசமாக்கினர். அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரைக்கப் பட்ட ஆட்சியாளர்களை எகிப்திற்கு அண்மையாக உள்ள மத்திய தரைக் கடல் நகரனா தொப்ருக்கிற்கு விரட்டினர். இரு “ஆட்சியாளர்களும்” தொடர்ந்து மோதிக் கொண்டனர். மூன்றாவது ஆட்சியாளர்களாக ஐ எஸ் அமைப்பினர். கடாஃபியைப் பதவியில் இருந்து விலக்குவதில் ஒன்றுபட்டுச் செயற்பட்ட ஐக்கிய அமெரிக்க அமீரகமும் கட்டாரும் பின்னர் ஒன்றுக்கு ஒன்று எதிர் எதிர் அணியில் நிற்கின்றன. தொப்ருக்கில் இருந்து செயற்படும் படைக்கலன் ஏந்திய குழுவிற்கு ஐக்கிய அமீரகம், இரசியா எகிப்து ஆகியவை பின் வலுவாக இருக்கின்றன. திரிப்போலியில் செயற்படும் இஸ்லாமியவாதிகளுக்கு காட்டர், துருக்கி, சூடான் ஆகிய நாடுகள் உதவியாக இருக்கின்றன. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கும் எகிப்தியப் படைத்துறை ஆட்சியாளர்களுக்கும் அப்துல் கமால் நாசர் ஆட்சியில் இருந்தே தீராத பகை. மக்களாட்சிப்படி இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய மதவாத ஆட்சி நடக்க வேண்டும் என்ற கொள்கையுடைய இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை மன்னராட்சி செய்யும் அரபுநாடுகளின் ஆட்சியாளர்களும் கடுமையாக வெறுக்கின்றனர். இந்த இருதரப்பில் யாருடன் சேர்வது என்று தெரியாத நிலையில் சவுதி அரேபியா இருக்கின்றது. 2014-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் ஜின்ரான் படையினர், லிபியத் தேசியப் படையினர், ஆகியவை லிபியக் கௌரவம் என்னும் குடை அமைப்பின் கீழும் மேற்குப் பிராந்தியத்தில் லிபிய உதயம் என்னும் பெயரில் இன்னும் ஒரு குடை அமைப்பும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன.

கடாஃபியின் கைக்கூலிப் படைகள்
2011-ம் ஆண்டு கடாஃபிக்கு எதிரான போரின் போது கடாஃபியால் தனது படையினரை நம்ப முடியாமல் போனது. அதனால் சாட் போன்ற அயல் நாடுகளில் இருந்து இளைஞர்களைத் தனது படையில் சம்பளத்திற்குச் சேர்த்துக் கொண்டதுடன் அவர்களுக்கு லிபியக் குடியுரிமையும் வழங்கினார். ஏற்கனவே லிபியாவில் உள்ள பலபடைக்கலன்கள் ஏந்திய குழுக்களுடன் இவர்களின் குழுக்களும் தமக்கென நிலப்பரப்புக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள். இது லிபியச் சிக்கலை மேலும் மோசமாக்கின்றது.

லிபியாவில் அமெரிக்கா
லிபியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அமெரிக்காவால் அங்கு ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தாவிடினும் குறைந்தது கடாஃபியின் ஆட்சியில் மக்களுக்குக் கிடைத்த நிம்மதியைக் கூட அமெரிக்காவால் லிபிய மக்களுக்கு வழங்க முடியவில்லை. கடாஃபிக்குப் பின்னர் லிபியாவில் யார் ஆட்சியில் அமர வேண்டும் என்பதைத் திட்ட மிட்டு நிறைவேற்றாமல் விட்டது தனது ஆட்சிக் காலத்தில் விட்ட மிகப் பெரும் தவறு என்கின்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்கா அவ்வப் போது தனது சிறப்புப் படையணிகளை லிபியாவிற்கு அனுப்பி இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கொலை செய்து கொண்டிருக்கின்றது. 2016-ம் ஆண்டு எட்டாம் மாதத்தில் இருந்து அமெரிக்கப் படையினர் லிபியாவின் மீது அதிக கவனம் செலுத்தத் தொடங்கியது. ஐ எஸ் அமைப்பின் தலைவர்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் இருந்து தப்பி லிபியா சென்றமையே இதற்கான காரணம். அமெரிக்கா தனக்கு ஏதுவான குழுக்கள் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல்கள் செய்வதற்கு உதவி செய்கின்றது. இதற்காக சிறிய அளவு எண்ணிக்கையைக் கொண்ட அமெரிக்காவின் சிறப்புப் படையணியினர் அடிக்கடி லிபியா சென்று வருகின்றனர். அடிக்கடி அமெரிக்க விமானங்கள் லிபியாவிற்குள் சென்று குண்டுகளையும் வீசுகின்றன.

ஈரானும் லிபியாவும்
ஈரானியக் கரங்கள் ஈராக், சிரியா, லெபனான், சூடான், ஆகிய நாடுகள் வரை நீண்டிருக்கின்றன. இதனால் அரபு நாடுகளில் ஐந்தில் ஒரு பகுதியில் அரபு நாடல்லாத ஈரான் ஆதிக்கம் செலுத்துகின்றது. எகிப்த்து லிபியா, பாஹ்ரேன், அல்ஜீரியா, துனிசீயா ஆகிய நாடுகளைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து ஒரு வல்லரசாக வேண்டும் என்ற ஈரானிய மதவாத ஆட்சியாளர்களின் கனவு பல ஆட்சிக் கூறுகளாகப் பிரிவு பட்டிருக்கும் லிபியாவில் கூட சரிவரவில்லை. ஈராக்கைப் போல் லிபியாவில் சியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இல்லை. சிரியாவைப் போல் சியா முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரத்திலும் இல்லை. இதனால் ஈரானால் கணிசமான அளவு ஆதிக்கம் லிபியாவில் செலுத்த முடியவில்லை.

பலஸ்த்தீனியப் பிரச்சனையை அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தீர்க்க முடியாமல் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையாலும் மேற்கு நாடுகளாலும் அவற்றுடன் நட்புப்பாராட்டும் வளைகுடா நாடுகளாலும் லிபியப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது. மத்திய தரைக் கடலின் தென் கரையில் உள்ள நாடுகளான எகிப்த்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பினால் ரணகளத்தில் மிதக்க வேண்டுமா?


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...