Saturday 16 November 2013

சகோதரக் கொலைக்கு மன்னிப்புக் கேட்ட அல் கெய்தா

சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக தீரமாகப் போராடிவரும் குழுவான ஈராக்கிற்கும் அல்-ஷாமிற்குமான இசுலாமிய அரசு (Islamic State of Iraq and al-Sham (ISIS)) என்னும் குழு தமது உறுப்பினர் ஒருவரை பொதுமக்கள் முன் கழுத்து வெட்டிக் கொன்றதுடன் அவரது தலையை பலரும் பார்க்கக் கூடியதாகத் தொங்கவிட்டது.

அலேப்பே நகரில் செய்யப்பட்ட இந்தக் கொலை ஆள் மாறட்டாத்தால் செய்யப்பட்டது எனப் பின்னர் ஈராக்கிற்கும் அல்-ஷாமிற்குமான இசுலாமிய அரசு அமைப்பினர் உணர்ந்து கொண்டனர். இவர்கள் அதிபர் அல் அசாத்தின் படையினருடன் இணைந்து செயற்படுபவர் எனக் கருது தமது அமைப்பின் ஒரு உறுப்பினரை தலை வெட்டிக் கொன்று விட்டனர். அத்துடன் இந்தக் கொலையை கணொளிப்பதிவு செய்து யூடியூப்பிலும் பதிவேற்றி விட்டனர். பின்னர் தமது தவற்றிற்கு ஈராக்கிற்கும் அல்-ஷாமிற்குமான இசுலாமிய அரசு அமைப்பினர் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

 வெட்டிய தலையை கையில் வைத்துக் கொண்டு கடவுளைத் தொழுகின்றனர். இந்தக் காணொளி இணைப்பு கொடூரமானது. பார்க்காமல் இருப்பது நல்லது.: http://www.youtube.com/watch?v=alCsFKyAZR8&bpctr=1384611504


Friday 15 November 2013

பிலிப்பைன்ஸின் அவலத்தில் சீனாவின் கஞ்சத்தனம்

பிலிப்பைன்ஸ் உலகிலேயே நான்காவது பெரிய புயலால் பாதிக்கப்பட்ட போது அதற்கு உதவுவதற்கு உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்டதும் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதரத்தைக் கொண்டதுமான சீனா கஞ்சத்தனம் காட்டுகிறது. ஹையான் புயலால பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸிற்கு சீன செய்த உதவியிலும் பார்க்க சுவிடனின் ஐக்கியா என்னும் தனியார் நிறுவனம் கொடுத்த உதவி அதிகமாகும் என்கிறது பிரித்தானிய கார்டியன் பத்திரிகை.

ஐக்கிய அமெரிக்கா இருபது மில்லியன் டொலர்களும் ஜப்பான் பத்து மில்லியன் டொலர்களும் பிலிப்பைன்ஸிற்கு உதவ முன்வந்த போது சீனா இரண்டு மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவியை மட்டுமே செய்கிறது.

தென் சீனக் கடலில் சீனாவிற்கு பிலிப்பைன்ஸுடன் உள்ள எல்லைப் பிரச்சனையே சீனாவின் கஞ்சத்தனத்திற்கு காரணம் எனச் சொல்லப்படுகின்றது. சீனா தான் ஒரு பொறுப்புள்ள வல்லரசு எனக் காட்டி உலகின் நன்மதிப்பைப் பெறும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டது என்கிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சீனா தொடர்பான நிபுணர் Zheng Yongnian.

சீனா தென் சீனக்கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் எல்லை தொடர்பாக பல நாடுகளுடன் முரண்படுகின்றது ஆனால் பிலிப்பைன்ஸ் மட்டும் சீனாவை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு இழுத்த ஒரு நாடாகும். அத்துடன் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவுடன் அதிக நட்புறவை வளர்க்கிறது.

2012இன் முற்பகுதியில் சீனாவிற்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் உள்ள Scarborough Shoal என்னும் பாறைத் தீவு தொடர்பாக இரு நாட்டுக் கப்பல்களும் கடுமையாக முரண்பட்டுக் கொண்டன.

சீனா எல்லா வல்லரசுகளிலும் பார்க்கப் பெரிதாகி உலகப் பெரு வல்லரசானால்?????

Thursday 14 November 2013

இந்தியாவின் புதிய "துருவ்" ஹெலிக்கொப்டர்கள்

பன்முக நோக்கங்களும் செயற்பாடுகளும் கொண்ட முப்படைகளும் பாவிக்கக் கூடிய துருவ் ஹெலிகாபடர்களை இந்தியா தனது கடற்படையில் முதன் முதலாக சேவையில் அறிமுகப் படுத்தியுள்ளது. 13-11-2013-ம் திகதி கொச்சி துறைமுகத்தில் இந்த ஹெலிகாப்டர் சம்பிர்தாய பூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. துருவ் Advanced Light Helicopter (ALH) என்னும் வகையைச் சேர்தவையாகும்.

துருவ் ஹெலிக்கொப்டர்களின் அணி  Indian Naval Air Squadron (INAS) 322 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஹெலிக்கொப்டர்கள் இரவிலும் பகலிலும் பயன்படுத்தக் கூடிவை. தாக்குதலிலும் ஈடுபடுத்தலாம் மற்ற தேடி மீட்பு சேவைகளிலும் ஈடுபடுத்தலாம். இவற்றில் கதுவி (ரடார்), ஏவுகணை உணர்கருவி (missile detector), அலைவரிசை குழப்பி (infrared jammer) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. தானாகவே செலுத்தப்படும் (self-propelled) டொர்பீடோ ஏவுகணைகள் இரண்டையோ அல்லது நான்கு கப்பல் எதிர் ஏவுகணைகளையோ தாங்கிச் செல்லக் கூடியவை இந்த துருவ் ஹெலிகொப்டர்கள். மணித்தியாலத்திற்கு 265கிலோ மீட்டர் வேகத்தில் இவற்றால் பறக்க முடியும். ஆகக் கூடியது நான்கு மணித்தியாலங்களும் இருபது நிமிடங்களும் இவற்றால் தொடர்ந்து பறக்க முடியும். பறப்புத் தூரம் 700கிலே மீட்டர்களாகும்.


Wednesday 13 November 2013

ஆளில்லாப் போர்விமானங்களை அல் கெய்தா ஏமாற்றும் வழிகள்

1996-ம் ஆண்டு ஒசாமா பின் லாடன் அமெரிக்காவிற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்த போது அது அமெரிக்காவில் நகைப்பிற்கு இடமான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆப்கானிஸ்த்தானில் மண்குடிசைகளுக்குள் வாழும் ஒரு கும்பல் ஒரு பெரும் வல்லரசின் மீது எப்படித் தாக்குதல் நடத்த முடியும் என்ற கேள்வி இருந்தது. பின்னர் நியூயோர்க், இலண்டன், நைரோபி, பாலி, மாலி, ரியாத், பெங்காசி எனப் பல இடங்களில் மேற்கு நாடுகளை இலக்கு வைத்து பல மோசமான தாக்குதல்களை அல் கெய்தா செய்தது. பல பில்லியன்கள் செலவழித்தும் அல் கெய்தாவை அழிக்க முடியாத நிலையில் அமெரிக்கா இருக்கிறது.

அமெரிக்கா தனது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் பல அல் கெய்தா மற்றும் தலிபான் போராளிகளைக் கொன்று வருகின்றது. அமெரிக்காவில் இருந்து செயற்படும் மனித உரிமைக் கண்காணிப்பகமும் இலண்டனில் இருந்து செயற்படும் பன்னாட்டு மன்னிப்புச் சபையும் அமெரிக்கா நீதிக்குப் புறம்பான முறையில் தனது ஆளில்லாப் போர்விமானங்கள் மூலம் அப்பாவிகளைக் கொல்கின்றது என்று குற்றம் சாட்டியுள்ளன. இக்குற்றச் சாட்டை மறுத்த அமெரிக்க வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜே கார்னி தமது ஆளில்லாப் போர்விமானத் தாக்குதல்கள் இலக்குத் தப்பாதவை என்றும் சட்ட பூர்வமானவை என்றும் தெரிவித்தார்.

அல் கெய்தாப் போராளிகளின் மாலியில் உள்ள தளம் ஒன்றைக் கைப்பற்றிய பிரெஞ்சுப் படையினர் அவர்களின் பத்திரங்களில் இருந்து போராளிகள் ஆளில்லாப் போர்விமானங்களில் இருந்து எப்படித் தப்புகிறார்கள் என்ற தகவல்கள் அறியப்பட்டுள்ளது. அவை:

1. “sky grabber”  என்னும் இரசியாவில் உற்பத்தி செய்த கருவி மூலம் ஆளில்லாப் போர் விமானங்களின் வருகையை முன் கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
2. இரசியாவில் உற்பத்தி செய்த “Racal” என்னும் கருவி மூலம் ஆளில்லாப் போர்விமானங்களின் அலை வரிசைகளைக் குழப்பலாம்.
3. போராளிகள் பயணிக்கும் வண்டிகள் தங்கியிருக்கும் வீடுகளின் கூரைகளில் கண்ணாடிகளைப் பொருத்துவதன் மூலம் ஆளில்லாப் போர் விமானங்களில் இருந்து தப்பலாம்.
4. தாழப்பறக்கும் ஆளில்லாப் போர் விமானங்களை மறைந்திருது தாக்கலாம்.
5. சிறிய டைனமோக்களையும் முப்பது மீட்டர் செப்புத் தகட்டையும் பாவித்து ஆளில்லாப் போர் விமானங்களில் தேடிக் கண்டு பிடிக்கும் செயற்பாட்டைக்குழப்பலாம்.
6.  மைக்குரோவேவ் போன்றவற்றை தொடர்ந்து நாள் முழுக்க செயற்படுத்துவதன் மூலம் ஆளில்லாப் போர் விமானங்களின் உணரிகளைக் குழப்பலாம்.
7. இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொள்ளல்
8. சரியான கண்காணிப்புக்கள் மூலம் ஆளில்லாப் போர் விமானங்களின் நடமாட்டங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ளல்
9. நடமாட்டங்களை முகில் கூட்டங்கள் அதிகம் உள்ள நாட்களில் மேற் கொள்ளல்.
10.  உயர்ந்த மரங்கள் உள்ள இடங்களில் ஒளிந்து கொள்ளல்.
11. உயர் கட்டிடங்களின் நிழல்களில் இருத்தல்
12. எல்லா தொலை தொடர்புக் கருவிகளையும் நிறுத்தி வைத்தல்.
13. ஆளில்லாப் போர் விமானங்கள் வரும்போது வண்டிகளில் இருந்து வெளியேறி திசைக்கு ஒருவராகத் தப்பிச் செல்லல்.
14. பல உள்செல்லும் வழிகளும் வெளிச்செல்லும் வழிகளும் உள்ள கட்டிடங்களுள் ஒளித்தல்.
15. நிலத்திற்கு கீழ் உள்ள பதுங்கு குழிகளுக்குள் ஒளித்தல்.
16. முற்றாக இருட்டடிப்புச் செய்தல்
17. காட்டிக் கொடுப்போரையும் போட்டுக் கொடுப்போரையும் இனம் காணுதல்.
18. உருவப் பொம்மைகளைக் கொண்ட கூட்டத்தை அமைத்தல்.
19. குகைகளுக்குள் ஒளித்தல்
20. கார் டயர் போன்றவற்றை எரித்து புகை மண்டலத்தை உருவாக்குதல்
21. தொடர்பாடல்களைத் துண்டித்தல்
22. திறந்த வெளிகளில் கூடுவதைத் தவிர்த்தல்


Tuesday 12 November 2013

எகிப்து அமெரிக்காவைக் கைவிட்டு இரசியாவின் கையைப் பிடிக்கிறது!

1978-ம் ஆண்டுவரை சோவியத் ஒன்றியத்தின் செய்மதி நாடாக இருந்த எகிப்து காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் பின்னர் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக மாறியது. 1978இல் இருந்து எகிப்தியப் படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் டொலர்களை நிதி உதவியாக வழங்கி வந்தது.

2011இல் எகிப்தில் நடந்த அரபு வசந்ததில் படைத்துறையினரின் ஆட்சி கலைக்க்ப்பட்டது.  இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் மொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சியும் சிறப்பாக அமையாததாலும் அவர் படைத்துறையினரை ஓரம் கட்ட முயன்றதாலும் எகிப்தில் மீண்டும் படைத்துறையினர் ஆட்சிக்கு வந்தனர். இது மக்களாட்சி முறைமைக்கு எதிரானது என்றபடியால் அமெரிக்கா எகிப்தியப் படைத்துறையினருக்கு வழங்கி வந்த நிதி உதவியான இரண்டு பில்லியன்களில் 1.5 பில்லியனகள் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து எகிப்தின் படைத்துறை ஆட்சியினருக்கு அமெரிக்காமீது அதிருப்தி ஏற்பட்டது. 2013 ஒக்டோபர் 16-ம் திகதி எகிப்திய வெளிநாட்டமைச்சர் பத்ர் அப்துல் அர்ரி அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் இடையிலான உறவு மோசமடைந்து விட்டது என்றார். 2013 நவம்பர் மாத முற்பகுதியில் எகிப்திற்கு அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி பயணம் செய்தார்.  அப்பயணம் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவைச் சீர் செய்ய வில்லை.

எகிப்திற்கு அமெரிக்கா செய்து வந்த நிதி உதவியை நிறுத்தியதை இஸ்ரேலும் விரும்பவில்லை. அமெரிக்கா பெரும் கேந்திரோபாயத் தவறைச் செய்வதாக ஒபாமா நிர்வாகத்திடம் இஸ்ரேல் எடுத்துச் சொல்லியது. எகிப்து அமெரிக்காவில் தங்கியிருப்பது குறைந்தால் அது எகிப்தும் இஸ்ரேலும் செய்த காம்ப் டேவிட் சமாதான உடன்படிக்கையை ஆபத்திற்கு உள்ளாக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது. அமெரிக்கா வழங்கும் நிதியுதவியில் பெரும்பகுதியை எகிப்து அமெரிக்காவில் இருந்து படைக்கலங்களை இறக்குமதி செய்யவே பயன்படுத்தி வந்தது. எகிப்தின் கல்வித்துறை, மருத்துவத்துறை, பயங்கரவாத ஒழிப்பு, படைகலன்களுக்கான உதிரிப்பாகங்கள், எல்லைப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்யும் என அமெரிக்கா சொல்கிறது.

சவுதி அரேபியாவின் ஏற்பாடு
இஸ்ரேலிய அச்சத்தை நியாயப்படுத்தும் வகையில் இரசிய கடற்படையின் சீர்வேக ஏவுகண தாங்கிக் கப்பலான வாரியக் எகிப்தின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தை 11-11-2013-ம் திகதி சென்றடைந்தது. அந்தக் கப்பல் எல்லாவித கடற்படை மரியாதையுடனும் வரவேற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரசிய வெளிநாட்டமைச்சர் செர்கெவ் லாவ்ரோவும் பாதுகாப்பு அமைச்சர் சேர்கி சொய்குவும் (Foreign Minister Sergey Lavrov and Defense Minister Sergey Shoigu) 13-11-2013-ம் திகதி எகிப்திற்குப் பயணம் செய்கின்றனர். எகிப்து நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான படைக்கலங்களை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்ய முயல்கிறது. எகிப்தின் அஸ்வான் அணைக்கட்டை மேம்படுத்தவும் மின் பிறப்பாக்கிகளை நிறுவவும் இரசியா உதவி செய்யும் பதிலாக எகிப்த்தின் மத்தியதரைக் கடல் துறைமுகம் ஒன்றை இரசியா பயன்படுத்த எகிப்து அனுமதி வழங்க வேண்டும். இந்த ஏற்பாடுகள் யாவற்றையும் செய்தது சவுதி அரேபியாவின் உளவுத் துறையின் இயக்குனரான இளவரசர் பந்தர் பின் சுல்தான் என்பதுதான் ஆத்திரமளிக்கும் விவகாரமாகும். இளவரசர் பந்தர் பின் சுல்தான் 2013 ஜூலை மாதம் இரசியாவிற்குப் பயணம் செய்த போது விளாடிமீர் புட்டீனுடன் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாம்.

ஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை இனி வரும் காலங்களில் எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவிடும்.  அதற்கு மத்திய கிழக்கின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. எகிப்து அமெரிக்காவைக் கைவிட்டு இரசியாவின் கையைப் பிடிக்கிறதா அல்லது அமெரிக்கா, சவுதி அரேபியா, இரசியா ஆகியவை இணைந்து சீனாவை மத்தியகிழக்கில் ஓரம் கட்ட சதி செய்கின்றனவா?



Monday 11 November 2013

மாறும் சீனப் பொருளாதாரம் தேறுமா?

கடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்த போதிலும், சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்த போதிலும் சீனா இன்னும் ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக மாறவில்லை. அது இப்போதும் ஒரு வளர்முக நாடாகவே இருக்கிறது.

ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக இருப்பதற்கு அதன் மொத்தத் தேசிய உற்பத்தி (gross domestic product (GDP)), தனிநபரின் சராசரி வருமானம் (per capita income), கைத்தொழில்மயமான நிலை (level of industrialization),  பரவலான கட்டமைப்பின் அளவு (amount of widespread infrastructure), பொதுவான வாழ்க்கைத்தரம் (general standard of living) ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். இந்தவகையில் ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவுமே  அபிவிருத்தியடைந்த நாடுகளாக இருக்கின்றன.

1979-ம் ஆண்டு சீனா செய்த பொருளாதாரச் சீர்திருத்தத்தால் சீனப் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி கண்டு அறுபது கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சீனப் பொருளாதாரம் தனது வேகத்தை இழக்கும் என பல மேற்கத்தையப் பொருளாதார நிபுணர்கள் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தது போல் இல்லாத படியால் சீனா இதில் உண்மை இருக்கிறது என உணர்ந்து கொண்டிருக்கிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியை தடையின்றித் தொடரச் செய்ய சீனாவின் பொருளாதாரத்தில் மேலும் சீர்திருத்தம் அவசியம் என சீனப் பொதுவுடமைக் கட்சியினர் உணர்ந்துள்ளனர். சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2013-11-09-ம் திகதி ஆரம்பமான சீனப் பொதுவுடமைக்கட்சியின் 18வது மத்திய குழுவின் மூன்றாவது கூட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. சீனாவின் பொருளாதாரத்தை மேலும் சீர்திருத்தப்படுவது இந்தக் கூட்டத் தொடரில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குத் தெரிவு செய்யப்படும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு ஆண்டு தோறும் கூட்டம் நடத்தும். இதில் மூன்றாம் ஆண்டு நடத்தப்படும் கூட்டத்தில் பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்தப் படும். 1978-ம் ஆண்டில் நடந்த 11வது மத்திய குழுவின் மூன்றாவது கூட்டத் தொடரிலேயே சீனப் பொருளாதாரத்தை சீர்திருத்தும் தீர்மானம் முதலில் எடுக்கப்பட்டது. சீனப் பொருளாதாரத்தின் செயற்படுதிறனை அதிகரிப்பதற்கும் மேற்கு நாடுகளுடன் போட்டியிடுவதற்கும் சீனாவின் பொருளாதாரம் மேற்கத்தைய பொருளாதாரப் பாணியை நோக்கி மேலும் தாராண்மைப் படுத்தப் படவேண்டும் என்ற கருத்து இருநூற்று ஐந்து உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழுவின் முன்றாவது கூட்டத்தொடரின் முக்கிய அமசமாக இருக்கிறது. திறனற்ற பொருளாதாரம், வருமான சமபங்கீட்டின்மை, ஊழல், நில உடமைப் பிரச்சனை, மோசமான உள்ளூராட்சி நிர்வாகம் ஆகியவை சீனப் பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சனையாகும். அத்துடன் ஒரு வளர்ச்சியடைந்த பொருளாதாரத்துக்குரிய வங்கி முறைமை, முதலீட்டுச் சந்தை ஆகியவை சீனாவில் இல்லை. இந்தப் பிரச்சனைகள் சீன ஆட்சியாளர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது.

சீனா இனிவரும் காலங்களில் செய்யவிருக்கும் மாறுதல்களும் செய்ய வேண்டிய மாறுதல்களும்:

அரசுடமையில் இருந்து தனியுடைமைக்கு மாறுதல்
சீனாவின் உற்பத்தித் துறையில் பெரும்பான்மையானவை தற்போதும் அரச கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அரசுடைமை நிறுவனங்களின் செயற்படு திறன் குறைந்தவையாக இருப்பதால் சீன வளங்களை பயன்படுத்தும் திறன் பல வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவாகவே இருக்கின்றன. இந்த இடைவெளியை சீர் செய்ய சீனா தனது பொருளாதாரத்தில் தனியார் முதலீடுகளை அதிகரிக்கவிருக்கிறது. பல அரசுடைமை நிறுவனங்கள் சீன பொதுவுடைமைக் கட்சியில் முக்கிய தலைவர்களின் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களின் எதிர்ப்பை சமாளித்தே தனியார் மயமாக்கலைச் செய்ய வேண்டிய நிலையில் சீனப் பொதுவுடமைக்கட்சியும் ஆட்சியாளர்களும் இருக்கின்றனர். சீனா பல வர்த்தக மற்றும் உற்பத்தித் துறையில் தனியார் முதலீட்டை 90விழுக்காடாக அதிகரிக்கும் திட்டத்துடன் இருக்கிறது. பல சேவைத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கவிருக்கிறது.

கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்தல்
Sony, Toyota, Samsung, Hyundai, LG இப்படிப் பல வர்த்தகப் பெயர்கள் எமது நாளாந்த வாழ்வில் அடிபடும் பெயர்களாக இருக்கின்றன. நாம் பல சீனாவில் செய்த பொருட்களைப் பாவித்தாலும் எந்த ஒரு சீன வணிகப் பெயரோ சின்னமோ எம்மனதில் இல்லை. இதற்குக் காரணம் சீனாவில் கண்டுபிடிப்புக்கள் பெரிய அளவில் இல்லை. சீனா தனது கண்டுபிடிப்புக்களை ஊக்கவிப்பது மிகவும் அவசியம் என சீன ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர்.

ஊழல் ஒழிப்பு
சீனாவில் ஊழல் பல நிலையிலும் பல தரப்பிலும் பரந்து காணப்படுகின்றது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் சீனாவில் ஊழலை ஒழிக்கும் திட்டத்தை ஏற்கனவே செயற்படுத்தத் தொடங்கிவிட்டார்.

வங்கித் துறைச் சீர்திருத்தம்
சீனப் பொருளாதாரத்தின் செயற்படுதிறனுக்கு தடையாக இருப்பவற்றில் மோசமானது அதன் அரச வங்கிகளாகும். அரச வங்கிகள் அரச நிறுவங்களிற்கு மட்டும் கடன் வழங்குவது அவற்றிற்கு ஒரு பாதுகாப்பான நடவடிக்கைகளாகும். மேற்கு நாடுகள் போல் போட்டி அடிப்படையில் சிறந்த இலாபமீட்டும் உற்பத்தித் துறைக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தினால் சீனாவின் வளங்கள் சிறந்த முறையில் பயங்படுத்தப் படும். சீனாவின் வங்கி வட்டி வீதத்தையும் சீன நாணய மாற்று வீதத்தையும் சுதந்திரமாக தீர்மானிக்க சீன அரசு அனுமதிக்கும் திட்டமும் உள்ளது.

உலக நாணயமாக சீனாவின் நாணயம்
சீனா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும் போது அமெரிக்கப் பொருளாதாரத்திலோ அதன் நாணயமான டொலரிலோ ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் சீனப் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருக்க சீனா தனது நாணயமான யுவானை உலக நாணயமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு பத்தாண்டுத் திட்டம் சீனாவிடம் இருக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு சீன வங்கித் துறையும் சீன நிதிச்சந்தையும் பெரும் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உள்ளாக வேண்டும். இதுவரை காலமும் சீனா தனது நாணயத்தின் மதிப்பை செயற்கையாகக் குறைந்து வைத்திருக்கின்றது என்ற குற்றச் சாட்டு இருக்கின்றது. சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்றுவதாயின் அதன் பெறுமதியை உலக நாணயச் சந்தையில் சீன நாணயத்தை வாங்குவதற்கான விரும்பமும் விற்பதற்கான விருப்பமுமே தீர்மானிக்க வேண்டும். இதனால் சீன நாணயத்தின் பெறுமதி அதிகரித்தால் சீனாவின் ஏற்றுமதிச் சந்தையை இந்தியா, பிரேசில், இரசியா ஆகிய நாடுகள் கைப்பற்றலாம். இது சீனாவின் உற்பத்தித் துறையை பெரிதும் பாதிக்கலாம்.

திட்டமிடலால் திண்டாடும் மக்கள்
சீனாவில் நகரங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகின்றன. கிராமப் புறமக்கள் அங்கு கொண்டு சென்று குடியமர்த்தப்படுவார்கள். பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்த நிலையில் இவர்கள் தெருத் துப்பரவாக்கும் வேலைகள் நகரப் பூங்கா பராமரிப்புச் செய்யும் வேலைகள் போன்றவற்றை செய்ய வேண்டிய நிலை உருவாகுவதுண்டு. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விரும்பிய நகரங்களுக்கு சென்று விரும்பிய வேலை செய்வதற்கு அரசின் அனுமதி பெறவேண்டிய நிலைமையும் சீனாவில் உண்டு. ஹுக்கௌ என்னும் பதிவு முறைமை மூலம் சீனா இந்த மக்கள் நகர்வுகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இதை மாற்றக்கூடிய திட்டம் சீனாவிற்கு அவசியம். சீன அரசு மிகக் குறைந்த விலைக்கு விவசாயிகளின் காணிகளை கட்டாயப்படுத்தி வாங்கி வேறு நிறுவனங்களுக்கு மிக அதிக விலைக்கு விற்றமையும் சீனாவில் பரவலாக நடந்ததுண்டு.

மக்களின் கொள்வனவு வலு
சீனாவின் பொருளாதாரம் கடந்த முப்பது ஆண்டுகளாக ஏற்றுமதியிலும் உள் நாட்டில் பெருந்தெருக்கள், விமான நிலையங்கள் போன்ற கட்டுமான அபிவிருத்தியிலும் தங்கி இருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரம் அதன் மக்களின் கொள்வனவு வலுவில்தான் பெரிதும் தங்கியிருக்கும். சீன மக்களின் வருமானம் அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை சீனா எடுக்க வேண்டும்.

வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரம் நலிவடைந்து இருக்கும் நிலையில் சீனா தனது பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்யும் முடிவை எடுக்கிறது. சீனப் பொதுவுடமைக் கட்சியினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி ஒக்டோபர் மாதம் முடிவடைந்த ஆண்டில் 10.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிகமாகும்.

சீனா வெறுமனவே பொருளாதாரத் சீர் திருத்தத்தை மட்டும் அறிமுகம் செய்து அதன் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது அது அரசியல் சீர்திருத்தத்தையும் செய்ய வேண்டும் என சில மேற்கதைய அரசியல் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். சீனாவின் பொதுவுடமைக்கட்சியின் 18வது மத்திய குழுவின் மூன்றாவது கூட்டத் தொடரில் அப்படி ஒரு திட்டம் முனவைக்கப்படவில்லை. இந்த மாற்றம் இன்றி தனது பொருளாதாரத்தை தேற்ற சீனாவால் முடியுமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...