Saturday 5 January 2013

நகைச்சுவை: நடுவில கொஞ்சம் துணியைக் காணோம்

நடுவில கொஞ்சம் துணியைக் காணோம்
   - நடிகை.

நடுவில கொஞ்சம் நிதியைக் காணோம்
   - மந்திரி

நடுவில கொஞ்சம் சீட்டுக்களைக் காணோம்
  - தேர்தல்

நடுவில கொஞ்சம் ரசிகர்களைக் காணோம்
  - மொக்கைத் திரைப்படம்


 பொய் சொலவதை கண்டறியும் பொறி(இயந்திரம்)
அமெரிக்காவில் பாராளமன்றத்தில் பொய் சொல்லுபவர்களைக் கண்டுபிடிக்கும் பொறி(இயந்திரம்) ஒன்றைக் கண்டுபிடித்து அதைப் பல நாட்டுப் பாராளமனறங்களில் பரீட்சிட்துப் பார்த்தனர்.
அமெரிக்காவில் ஒரு நாளில் 14 உறுப்பினர்கள் பொய் சொல்வது கண்டறியப்பட்டது.
பிரான்சில் ஒரு நாளில் 11 உறுப்பினர்கள் பொய் சொல்வது கண்டறியப்பட்டது.
இங்கிலாந்தில் ஒரு நாளில் 7 உறுப்பினர்கள் பொய் சொல்வது கண்டறியப்பட்டது.
இந்தியாவில் ஒரு நாளில் பொறி(இயந்திரம்) காணாமல் போய்விட்டது.

ஒரு எழுத்துப் பிழை
திடீரென பெரும் செல்வந்தராகிய சோனியா காந்தியின் மருமகன் Robert Vadra விற்குப் பெயர் வைக்கும் போது அவரது பெற்றோர்கள் அவரது முதற்பெயர் Robert இல் தேவையில்லாமல் ஒரு t ஐச் சேர்த்து விட்டார்கள்.

தத்துவங்கள்
உன்னிடம் பணம் இருந்தால் உன்னை நீ மறந்துவிடுவாய். உன்னிடம் பணம் இல்லாவிடில் உலகம் உன்னை மறந்துவிடும். -  பில் கேட்ஸ்

நீ சொல்லாததைப் புரிந்து கொள்பவன் உன் உண்மையான நண்பன்.

I speak my mind. I never mind what I speak.


Friday 4 January 2013

மௌலவி நஜீர் கொலை தலிபானிற்கு இன்னும் ஒரு பேரிழப்பு

பாக்கிஸ்த்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் ஆப்கானிஸ்த்தானின் எல்லையில் உள்ள வாரிஸ்த்தனில் ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லா விமானம் 03-01-2012 புதன் கிழமை நடாத்திய தாக்குதலில் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதியான மௌலவி நஜீர் வஜீர் கொல்லப்பட்டுள்ளார். இது தலிபான் இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.

சென்ற ஆண்டின் இறுதியில் சூடானில் அப்பாவிகளைக் கொன்ற அமெரிக்க ஆளில்லா விமாங்கள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலக்குத் தவறாத தாக்குதலை நிறைவேற்றியது. மீண்டும் 4-ம் திகதி வியாழக்கிழமையும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் வாரிஸ்த்தானில தாக்குதல் நடாத்தி இனம் தெரியாத நான்கு பேரைக் கொன்றன.

 மௌலவி நஜீர் வஜீர் தென் வாரிஸ்த்தான் பிராந்தியத்தில் Ahmadzai Wazir இனக்குழுமத்தை தலைமை தாங்கி ஆப்கானிஸ்த்தானிற்கு எதிராக போராடி வந்தார். தலிபானின் நான்கு பெரும் குழுக்களில்  மௌலவி நஜீர் வஜீரின் குழுவும் ஒன்றாகும். இவர் வட வாரிஸ்த்தானில் தளபதியாக இருக்கும் ஹஃபீஸ் கல் பஹதூருடன் இணைந்து செயற்படுகிறார். இவர்கள் இருவரும் மற்ற சில தலிபான்/அல் கெய்தா பிரிவுகளைப் போல் அல்லாமல் பாக்கிஸ்த்தானியப் படையினர் மீது தாக்குதல்கள் நடாத்துவதில்லை. மௌலவி நஜீருடன் ரத்தா கான் என்னும் ஒரு துணைத் தளபதி உட்பட மேலும் எட்டுப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்த்தானில் நிலை கொண்டுள்ள நேட்டோப் படையினருக்கு எதிராக தலிபான் இயக்கம் அடிக்கடி கரந்தடித் தாக்குதல்களைத் தனித்தும் மற்ற இசுலாமிய விடுதலை இயக்கங்களுடன் இணைந்தும் செய்து நேட்டோப் படையினருக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்துகின்றனர்.

கடந்த பத்து வருடங்களாக அமெரிக்காவிற்கு அதிக தலையிடி கொடுக்கும் பிராந்தியம் ஆப்கானிஸ்த்தானுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் எல்லைப் பகுதியே. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஆப்-பாக் கொள்கை என்று ஒன்று வகுக்கப்பட்டது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைத் தலைமைச் செயலகம் பெண்டகனிலும் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயிலும் ஆப்-பாக் பிரிவு என்று ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆப்-பாக் பிராந்தியத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக தாம் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவின் படைத்துறை வல்லுனர்கள் பேசியும் எழுதியும் வருகின்றனர். 09-07-2011இலன்று தனது சிஐஏ இயக்குனர் பதவியில் இருந்து அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலராக பதவி ஏற்ற லியோன் பனெற்றா அல் கெய்தாவை தாம் கேந்திர முக்கியத்துவ ரீதியில் தோற்கடிக்கும் நிலையை எட்டி விட்டதாகத் தெரிவித்தார். அவர் அப்படிச் சொல்வதற்குப் பல காரணங்கள் இருந்தன. அமெரிக்க ஆளில்லாப் போர்விமானங்கள் பல தீவிரவாதிகளைக் கொல்வதுடன் அவர்களது நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி வருகிறது. 2011 மே மாதம் பின் லாடனைக் கொன்றது. அவரது மாளிகையில் இருந்த அல் கெய்தாவின் கணனிப் பதிவேடுகளை அமெரிக்கப் படையினர் தம்முடன் எடுத்துச் சென்றுவிட்டனர். 

அதன் பின்னர் அமெரிக்கா பல முக்கியத்துவம் வாய்ந்த இசுலாமியத் தீவிரவாதப் போராளிகளை கொன்றுள்ளது:

  • அதியா அப் அல் ரஹ்மான் கொலை - பின் லாடனைத் தொடர்ந்து அல் கெய்தாவின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவரான அதியா அப் அல் ரஹ்மான் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டார். அதியா அப் அல் ரஹ்மான் ஈரானுடன் நல்ல உறவில் இருந்தவர். அத்துடன் சிறந்த பேச்சாளர், நிர்வாகி, பல நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவம் மிகுந்தவர்.
  • அன்வர் அல் அவ்லாக்கி கொலை  - அதன் பின்னர் அமெரிக்காவின் முதல் தர தீவிரவாத எதிரியாகக் கருதப்படும் அமெரிக்கக் குடியுரிமையுடைய அன்வர் அல் அவ்லாக்கி என்பவரை யேமனில் வைத்து அமெரிக்க ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் 2011 செப்டம்பர் 30-ம் திகதி  யேமன் நேரம் காலை 9-55 அளவில் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடாத்தி வரும் தாக்குதல்கள் அல் கெய்தாவிற்கு பலத்த ஆளணி இழப்புக்களை ஏற்படுத்தியதுடன் அவர்கள ஆளணிகளையும் படைக்கலன்களை விரும்பியபடி நகர்த்த முடியாத நிலையை ஏற்படுத்தியது. அமெரிக்கப் படைத்துறையினர் தமது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அல் கெய்தாவைப் பின் வாங்க வைத்தது என்கின்றனர். அது மட்டுமல்ல அமெரிக்கா இன்னும் பல புதுவித ஆளில்லா விமானங்களைக் களமிறக்க இருக்கிறது. ஆளில்லா விமானங்களை அதிகம் பயன் படுத்தலாம் என்ற துணிவுடனேயே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆப்கானிஸ்தானில் இருந்து பாரிய அளவிலான அமெரிக்கப் படைகளை 2012இல் ஆண்டு விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்.

இத்தனை பின்னடைவுகளுக்கு மத்தியிலும் அல் கெய்தா இனித் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகம் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அல் கெய்தா தனது உத்திகளை மாற்றிக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக அல் கெய்தா இயக்கம் தனது நடவடிக்கைகளை மட்டுப் படுத்திக் கொண்டது. ஒரு தீவிரவாத கரந்தடி இயக்கத்திற்கு எப்போது பதுங்க வேண்டும் என்று தெரியும். அல் கெய்தாவும் தலிபானும் தாம் பதுங்கிக் கொண்டு பாக்கிஸ்தானின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் ஹக்கானி இயக்கத்தை ஆப்க்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தத் இவ்விரு இயக்கங்களும் தூண்டின. ஹக்கானியை இந்தியா ஆப்கானிஸ்த்தானில் காலுன்றுவதைத் தடுக்க பாக்கிஸ்த்தான் பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

2014இல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் கொண்டுவர முயலும் ஒரு இணக்கப்பாட்டு நிலைக்கு  மௌலவி நஜீர் வஜீர் தலைமையிலான போராளிகள் குழு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. மௌலவி நஜீரின் கொலை பாக்கிஸ்த்தானிய அரசின் அனுமதியுடன் நடந்ததா என்ற சந்தேகம் தலிபான்/அல் கெய்தாப் போராளிகள் மத்தியில் எழுந்துள்ளது. இச் சந்தேகம் வலுப்பெறுமானால் அது பாக்கிஸ்த்தனிய அரசிற்கு பெரும் தலையிடியாக அமையும். அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் பாக்கிஸ்த்தானியப்  பிராந்தியத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் பாக்கிஸ்த்தானிய அரசு ஒரு இரட்டை வேடம் போடுகிறது என்ற குற்றச்சாட்டு பலரிடமும் உண்டு. பாக்கிஸ்த்தான் பகிரங்கமாக அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களின் தாக்குதல்களை கண்டித்தாலும் அது திரை மறைவில் அமெரிக்காவின் செய்கையை ஆதரிக்கிறது என்று கூறப்படுகிறது. பல பாக்கிஸ்த்தானியர்கள் அமெரிக்கா பாக்கிஸ்த்தானிய இறைமையை அத்து மீறி பாக்கிஸ்த்தானியப் பிராந்தியத்துக்குள் நுழைந்து தாக்குவதை எதிர்க்கின்றனர்.  மௌலவி நஜீர் வஜீரின் கொலை பாக்கிஸ்த்தானியப் படைத் துறையினர் இசுலாமியத் தீவிரவாதிகளுடன் ஏற்படுத்திய சமநிலையைக் குழப்பிவிடும் என பாக்கிஸ்தான் தரப்பில் அஞ்சப்படுகிறது. தலிபானிற்கும் பாக்கிஸ்தானியப் படையினருக்கும் இடையில் நல்ல உறவை வளர்ப்பதில்  மௌலவி நஜீர் வஜீர் பெரும் பங்காற்றி இருந்தார். பாக்கிஸ்த்தானில் தற்கொலைத் தாக்குதல் நடக்கலாம் என நாம் எதிர்பார்க்கலாம்.

Thursday 3 January 2013

அமெரிக்க நிதிப் படுகுழியும் உலகப் பொருளாதாரமும்.

அண்மைக் காலங்களாக US fiscal cliff என்னும் பதம் அடிக்கடி செய்தியில் அடிபட்டுக் கொண்டிருந்தது. மாயன் கலண்டரிலும் பார்க்க மோசமான ஒரு நிகழ்வாகவும் கருதப்பட்டது. அமெரிக்க fiscal cliff என்னும் அரச நிதிப் படுகுழி கடைசித் தருணத்தில் தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகெங்கும் பங்குச் சந்தையில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடப்பட்டது.  எரி பொருள் விலை அதிகரித்தது. இவை ஏன் நடந்தன?

அமெரிக்கக் கடன் உச்ச வரம்பு
அமெரிக்க அரசு எவ்வளவு கடன் படலாம் என்பதற்கு என்று ஒரு உச்ச வரம்பு (debt ceiling) உள்ளது. இதை அமெரிக்க பாராளமன்றத்தின் (காங்கிரசு) இரு அவைகளான மக்களவையும் மூதவையும் முடிவு செய்கின்றன. அமெரிக்க அரசின் செலவுகள் அதிகரித்து சென்றும் வரிவிதிப்பு வருமானம் குறைந்தும் செல்லும் போது அமெரிக்க அரசின் கடன் கட்டு மீறி அடிக்கடி செல்லும். அப்போது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். 1980 இற்குப் பின் கடன் உச்சவரம்பு 39தடவை உயர்த்தப் பட்டுள்ளன. ரொனால்ட் ரீகன் நிர்வாகத்தில் மட்டும் 17தடவை உயர்த்தப்பட்டன.

இரு கட்சிகளின் மோதல்
செல்வந்தர்களின் வரிகளை உயர்த்துவதை  குடியரசுக் கட்சியினர் (Republicans) விரும்புவதில்லை. அவர்கள் வறியவர்களுக்கான சமூகநலச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்கள். ஆனால மக்களாட்சிக் கட்சியினர்(Democrats) இதற்கு மாறான கருத்தைக் கொண்டவர்கள்.

2011 கடன் நெருக்கடி
2011இல் அமெரிக்காவின் கடன் அதன் உச்ச வரம்பை மீறிச் சென்றது. அப்போதும் குடியரசுக் கட்சியினர் மக்களவையில் பெரும்பான்மையாக இருந்தனர். மூதவையில் மக்களாட்சிக் கட்சியினர் பெரும்பான்மையாக இருந்தனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். கடன் உச்ச வரம்பு தொடர்பாக இரு கட்சியினருக்கும் இடையில் 2011இல் பெரும் முறுகல் இருந்தது. பெரும் பொருளாதரப் பிரச்சனை கடன் உச்ச வரம்பை உயர்த்தாவிடில் ஏற்படும் என்ற நிலையில் குடியரசுக் கட்சியினர் கடன் உச்ச வரம்பை உயர்த்த முடியாது என்று அடம் பிடித்தனர். அமெரிக்க அதிபருக்கு நிர்வாக அதிகாரம் மட்டுமே உண்டு. சட்டவாக்க அதிகாரம் மக்களவையிடமும் மூதவையிடமுமே உண்டு. முதலில் மக்களவையில் சட்ட மூலம் நிறவேற்றப்பட்டு பின்னர் மூதவையில் அங்கீகரிக்கப்பட்டு ஒரு சட்டம் அமூலுக்கு வரும். மக்களவையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்ததால்பராக் ஒபாமா  இக்கட்டான நிலையில் இருந்தார்.

2011இல் நிகழ்ந்த அமெரிக்கக் கடன் நெருக்கடியின் பின்னணி.
2010இல் ஒபாமாவும் மக்களவையும் அரச செலவீனங்களை மூன்று ரில்லியன் டொலர்களால் குறைக்கவும் வரி வருமானத்தை ஒரு ரில்லியன் டொலர்களால் அதிகரிக்கவும் ஒத்துக் கொண்டனர். 2011 ஜனவரியில் அறுவர் குழு எனப்படும் இரு கட்சிகளையும் சேர்ந்த ஆறு மூதவை உறுப்பினர்களைக் கொண்ட குழு அமெரிக்காவின் நீண்டகாலக் கடன் சுமையைக் குறைக்க உடன்பட்டது. இக்குழுவிற்கு அமெரிக்க உப அதிபர் பிடென் தலைமை தாங்கியதால் பிடென் குழு என்றும் அழைப்பர்.. 2011இல் குடியரசு உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மக்களவை முந்தைய ஆண்டிலும் பார்க்க 61பில்லியன் டொலர்கள் குறைவான செலவீனங்களைக் கொண்ட பாதிட்டை நிறைவேற்ற அதை ஒரு மாதம் கழித்து சனநாயக கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மூதவை நிராகரித்தது. 2011 ஏப்ரலில் அமெரிக்க அரசின் பாதீடு நிறை வேற்றப்படாமல் அரச நிர்வாகம் இழுத்து மூடப்படுமா என்ற நெருக்கடியின் விளிம்பு வரை அமெரிக்கா இட்டுச் செல்லப்பட்டது. இறுதியில் பத்து வருடங்களில் ஆறு ரில்லியன் டொலர்கள் செலவீனக் குறைப்புடன் அரச பாதீட்டை மக்களவை நிறைவேற்றியது. 2011 மே மாதம் 9-ம் திகதி அமெரிக்க மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் அதே அளவு செலவீனக் குறைப்புச் செய்யப்பட வேண்டும் என்று சூளுரைத்தார். 11-05-2011 மக்களவை கல்வி, தொழில், சுகாதார சேவை போன்றவற்றிற்கான செலவீனக் கட்டுப்பாகளை முன்வைத்தது. 16-05-2011 அமெரிக்க அரசு தன் கடன் உச்சவரம்பான 14.3 ரில்லியன் டொலர்களை எட்டியது. 17-05-2011 அறுவர் குழுவிற்குள்(பிடென் குழு) முரண்பாடுகள் தோன்றின. 31-05-2011 இலன்று அமெரிக்க மக்களவையில் கடன் உச்சவரம்பை உயர்த்தும் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. 23-06-2011 சனநாயகக் கட்சியினர் வரி விதிப்பை 400பில்லியன்களால் அதிகரிக்கப் பார்த்தார்கள் என்று குறை கூறி மீண்டும் அறுவர் குழுவிற்குள்(பிடென் குழு) முரண்பாடுகள் உருவாகின. ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒபாமாவும் குடியரசுக் கட்சியினரும் தொடர் பேச்சுவார்த்தைகளிலும் இழுபறிகளிலும் ஈடுபட்டனர். குடியரசுக் கட்சியினர் கேட்கும் செலவீனக் குறைப்பிற்கு மக்களாட்சிக் கட்சியினர் ஒத்துக் கொள்ளவில்லை . மக்களாட்சிக் கட்சியினர் கேட்கும் வரி அதிகரிப்புக்களுக்கு குடியரசுக் கட்சியினர் ஒத்துக் கொள்ளவில்லை.

2011 பாதீட்டுக் கட்டுப்பாடுச் சட்டம் - Budget Control Act of 2011
பாதீட்டுக் கட்டுப்பாடுச் சட்டத்தை 02-08-2012இல் நிறைவேற்றி 2011இல் கடன் உச்சவரம்பை உயர்த்த அமெரிக்காவின் இரு கட்சிகளும் ஒத்துக் கொண்டன. இச்சட்டத்தின் படி :
1.   2013இல் இருந்து பத்து ஆண்டுகளில் அமெரிக்க அரச செலவுகள் 1.2 ரில்லியன் டாலர்களால் குறைக்கப்பட வேண்டும்.
2. 2013-ம் ஆண்டு அரச செலவு 109 பில்லியன் டாலர்களால் குறைக்கப்படவேண்டும். 

இது போன்ற பல நிதிக் கட்டுப்பாடுகள் பாதீட்டுக் கட்டுப்பாடுச் சட்டத்தில் இருக்கின்றன. இதனால் 2013இல் அமெரிக்க அரசின் வரிகள் அதிகரிக்கப்படவேண்டும் செலவுகள் குறைக்கப்பட வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதார நிலைக்கேற்பவும் நாட்டின் பொருளாதாரம் எந்தத் திசையில் போக வேண்டும் என்பதற்கு ஏற்பவும் அந்நாட்டின் பாதீடு வரையப்படும். 2013இல் அமெரிக்காவின் பாதீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை 2011 பாதீட்டுக் கட்டுப்பாட்டுச் சட்டம் வரையறை செய்தது. எவ்வளவு வரி அதிகரிப்பது எவ்வளவு செலவுக் குறைப்புச் செய்வது என்பது பற்றி இரு கட்சிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதால் அமெரிக்க நிதி நிலை படுகுழியில் விழலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க அரச நிதி படுகுழியில் வீழ்ந்தால் அங்கு பொருளாதார மந்தம் ஏற்படும். அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்பட்டது.

Capitol Hill Vs White House
அமெரிக்கப் பாராளமன்றத்தை Capitol Hill என்றும் அமெரிக்க அதிபரின் பணிமனையை White House என்றும் கூறுவர். 2013இற்கான வரவும் செலவும் எப்படி இருக்க வேண்டும் என்பது Capitol Hill இற்கும்  White House இற்கும் இடையிலான போட்டியாகக் கருதப்பட்டது. 2013இற்கான வரவு செலவுகள் தொடர்பான இழுபறிகளால பராக் ஒபாமா தனது கிறிஸ்மஸ் விடுமுறையை இடையில் இரத்துச் செய்து விட்டுக் கடமைக்குத் திரும்பினார். மக்களவையில் பெரும்பான்மையினராக குடியரசுக் கட்சியினர் இருப்பதால்  அவர்களின் சம்மதம் அவசியம் தேவைப்பட்டது. இதனால் பெரும் இழுபறிக்குப் பின்னர் டிசமபர் 31-ம் திகதி இரவு ஓர் உடன்பாடு பராக் ஒபாமாவிற்கும் மக்களவைக்கும் இடையில் ஏற்பட்டது. அதன்படி அமெரிக்க வரியிறுப்பாளர் நிவாரணச் சட்டம் 2012 ( American Taxpayer Relief Act of 2012) வரையப்பட்டது. குடியரசுக் கட்சியினர் பெரும் விட்டுக் கொடுப்பைச் செய்ய வேண்டி இருந்தது. கடந்த 40 ஆண்டுகளில் ஒரு போதும் இல்லாத அளவு பெரும் வரிச்சுமை பெரும் செல்வந்தர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு $400,000 இற்கும் அதிக வருமானம் உடையோர் பெரும் வரி செலுத்த வேண்டி வரும். செல்வந்தர்கள் மீதான மொத்த வரி விதிப்பு $620 பில்லியன்களாகும். பாதீட்டு உடன்பாட்டில் குடியரசுக் கட்சியினர் சரணடைந்து விட்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர். பராக் ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது $250,000இற்கும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வரி அதிகரிக்கப்படும் எனப் பிரச்சாரம் செய்திருந்தார். அப்படிச் செய்ய குடியரசுக் கட்சியினர் சம்மதிக்கவில்லை. வருமான எல்லையை $400,000 ஆக அதிகரிக்கச் செய்தனர். பொதுவாக 71.7%மானவர்கள் அதிக வரியை 2013இல் செலுத்த வேண்டியிருக்கும்.  குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையினரான மக்களவையில் 257 பேரின் ஆதரவுடனும் 167 பேரின் எதிர்ப்புடனும் அமெரிக்க வரியிறுப்பாளர் நிவாரணச் சட்டம்-2012 நிறைவேற்றப்பட்டது.மூதவையில் 89 பேர் ஆதரவாகவும் ஒன்பது பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.

என்னடா இந்த வாஷிங்டனுக்கு வந்த சோதனை
அமெரிக்கா தொடர்ந்து பல ஆண்டுகளாக வரவிற்கு மிஞ்சி செலவு செய்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் இந்த செலவு அதிகரிப்பைச் சீனாவில் இருந்து பெறும் கடன் மூலம் ஈடு செய்யப்படுகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிக் குறைவை கடந்த சில ஆண்டுகளாகச் சந்தித்துள்ளது. இதற்கான காரணிகளில் முக்கியமானவை அமெரிக்காவின் மக்கள் தொகைக் கட்டமைப்பில் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிக விகிதமாக இருப்பதே. இதனால் சமூக நலன் செலவுகள் அதிகம். ஈராக், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா செய்த மற்றும் செய்து வரும் போர் அமெரிக்க பாதுகாப்புச் செலவை அதிகரித்து இருந்தது. 31-12-2012 இலன்று செய்து கொள்ளப்பட்ட நிதிப்படுகுழித் தவிர்ப்பு உடன்பாட்டின் படி உருவாக்கப்பட்ட அமெரிக்க வரியிறுப்பாளர் நிவாரணச் சட்டம் - 2012 ஏற்கனவே வேலையற்று இருக்கும் 12 மில்லியன் அமெரிக்கர்களுக்கு எந்த நன்மையையும் செய்யப் போவதில்லை. மாறாக வேலையற்றோர்களை அதிகரிக்கப் போகிறது. தொழிலாளர்களும் அதிக வரி செலுத்த வேண்டும்.

ஒரு குறுங்காலத் தீர்வே
அமெரிக்காவின் இரு கட்சியினருக்கும் இடையிலான அரச நிதிப் படுகுழித் தவிர்ப்பு உடன்பாடு ஒரு தற்காலிகத் தீர்வே. அமெரிக்காவின் அதிகரிக்கும் வரவிலும் பார்க்க அதிகரித்துக் கொண்டிருக்கும் செலவைக் குறைக்க உதவாது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இரு கட்சிகளும் கடன் உச்ச வரம்பை உயர்த்துவது தொடர்பாக மீண்டும் மோதிக் கொள்ளும். 2013இல் செய்த வரி அதிகரிப்பால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இது அரச வருமானத்தைக் குறைக்கும். அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியில் 1% குறைப்பை அரச நிதிப் படுகுழித் தவிர்ப்பு உடன்பாடு ஏற்படுத்தும் அத்துடன் ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் அமெரிக்காவின் மருத்துவ சேவையை இன்னும் மோசமாக்கும்.  ஆனால் உலகப் பங்குச் சந்தை நிம்மதிப் பெருமூச்சு விட்டது. உலகலளாவிய ரீதியில் பங்குச் சுட்டெண்கள் அதிகரித்தன. 


அமெரிக்க வரியிறுப்பாளர் நிவாரணச் சட்டம் - 2012ஒரு குழப்பம் நிறைந்த தற்காலிகத் தீர்வு மட்டுமே

Wednesday 2 January 2013

சீன - ஜப்பான் மோதல் தவிர்க்க முடியாததா?

கிழக்குச் சீனக் கடலிலே ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் பெரும் முறுகலை ஏற்படுத்திய தீவுக்கூட்டங்களிற்கு சீனா தனது மூன்று ரோந்துக் கப்பல்களை 31-12-2012இலன்று அனுப்பியுள்ளது. ஜப்பான் சென்காகு என்றும் சீனா டயோயு என்றும் அழைக்கும் தீவுக்கூட்டத்தை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களில் 1968இல் எண்ணெய் வளம் இருக்கலாம் எனக் கண்டறிந்ததைத் தொடர்ந்து சீனா அவற்றிற்கு உரிமை கொண்டாடி வருகிறது. கிழக்குச் சீனக் கடலில் மொத்தம் ஐந்து தீவுக் கூட்டங்களிற்கு சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வருகின்றன. 2012 டிசம்பர் ஆரம்பப்பகுதியில் இத் தீவுகளின் வான எல்லைக்குள் வந்த சீன விமானப்படை விமானங்களை ஜப்பானிய விமானங்கள் அலைவரிசைகளைக் குழப்பி திருப்பி அனுப்பின.

கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் உள்ள எல்லாத் தீவுகளையும் சீனா தன்னுடையது என்கிறது. இதனால் சீனாவிற்கும் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், தாய்வான், இந்தோனிசியா ஆகிய நாடுகளிற்கும் இடையில் கடும் முறுகல் நிலைகளை ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸுடன் உறுதியாக நிற்கும் அமெரிக்கா தென் சீனக்கடலை மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் என்கிறது.

 ஜப்பானும் சீனாவும் இரு பெரும் பொருளாதார வல்லரசுகள். இதனால் சீனாவும் ஜப்பானும் மோதிக்கொள்ளுமா எனற கேள்வி எழுந்துள்ளது. சீனாவின் மோட்டார் உற்பத்தித் துறைக்கு ஜப்பானிய மோட்டார் உற்பத்தித் துறை பெரும் சவாலாக இருக்கிறது. சீனர்கள் தமது நாட்டில் உற்பத்தியாகும் மோட்டார் வண்டிகளிலும் பார்க்க ஜப்பானிய மோட்டார் வண்டிகளை அதிகம் விரும்புகின்றனர். மோட்டார் உற்பத்தித் துறையில் சீனா ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியே இருக்கிறது. ஆனால் பல துறைகளில் சீனா ஜப்பானுக்கு பொருளாதார ரீதியில் பல சவால்களையும் கடும் போட்டிகளையும் உருவாக்கியுள்ளது. வேகமாக வளரும் சீனா தனக்கு பொருளாதார ரீதியாக மட்டுமல்ல படைத்துறை மற்றும் அரசியல் ரீதியாகவும் அச்சுறுத்தலாக அமையும் என ஜப்பான் கருதுகிறது. இதனால் சீன ஜப்பானிய முறுகல்கள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.

இந்தியாவை தன்வசம் இழுக்க முயலும் ஜப்பான்
இந்தியாவுடன் தனது உறவுகளை வளர்த்து சீனாவுடனான முறுகலில் தனக்கு உதவியாக இந்தியா இருப்பதை ஜப்பான் விரும்புகிறது. இந்தியாவுடன் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல படைத்துறை ரீதியாகவும் உறவுகளை வளர்க்க ஜப்பான் விரும்புகிறது.

கிழக்கு சீனக் கடலில் சீனாவிற்கும்  ஜப்பானுக்கும் இடையில் முறுகல்களை உருவாக்கியுள்ள பகுதி 210,000 சதுர கிலோமீட்டர்களைக் கொண்டது. இதில் 970 கி.மீ. நீளப்பகுதி ஒன்று, 495.5 பில்லியன் கன மீட்டர்கள் எரிவாயு மற்றும் 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஆகியவை இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறாது. சீனா 2008ம் ஆண்டு உடன்படிக்கையை முறிக்கும் விதத்தில் சர்ச்சைக்குட்பட்ட இடத்திற்கு அருகே தோண்டும் செயல்களைத் தொடங்கியுள்ளதாக டோக்கியோ குற்றம் சாட்டியுள்ளது. இது ஜப்பான் உரிமை கோரும் “பிரத்தியேக பொருளாதாரப் பகுதியில்” இருந்து எரிவாயுவை நிலத்தின் கீழாக உறிஞ்சிவிடும். 2010இல் ஜப்பானிய ரோந்துக் கப்பலுடன் மோதிய சீன மீன்பிடிக்கப்பல் தலைவனை ஜப்பான் கைது செய்தமையில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் மோசமடைந்தது.

கிழக்குச் சீனக் கடலில் சீன ஊடுருவலைக் கண்காணிக்க ஜப்பான் அமெரிக்காவிடம் இருந்து நவீன Global Hawk ரக ஆளில்லா விமானங்களை வாங்க எண்ணியுள்ளது. கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் சீனா தனது விரிவாக்கற் கொள்கையை உறுதி செய்ய முயல்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

ஒஸ்ரேலியப் பேராசிரியர் ஹுயூக் வைற் (Hugh White) சீனாவும் ஜப்பானும் 2013இல் மோதிக் கொள்ளும் என எதிர்வு கூறுகிறார். இரு நாடுகளிற்கும் இடையில் படைத்துறை உத்தி ரீதியான தொடர்பாடல் வசதிகளும் அனுபவங்களும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. இதானால் சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் ஜப்பானிற்கு பின் உதவியாக ஐக்கிய அமெரிக்கா இருந்து கொண்டு ஒரு மோதல் நடக்கும் சாத்தியம் அதிகம் உள்ளதாக பேராசிரியர் ஹுயூக் வைற் சொல்கிறார். ஆனால் ஜப்பானின் பொருளாதாரப் பிரச்சனையும் உலக பொருளாதார தேக்க நிலையும் ஒரு போர் செய்ய உகந்த நிலைமை தடுக்கின்றன. அமெரிக்காவின் பின்னணியுடன் கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் ஒரு போர் செய்யும் அனுபவம் சீனக் கடற்படைக்கு இல்லை. உலக வல்லரசுகளில் சீனக்கடற்படை மட்டுமே தற்கால கடற்போர் அனுபவம் எதுவும் இல்லாத ஒன்றாக இருக்கிறது. சென்ற ஆண்டுதான் சீனா முதல் முதலாக தனது கடற்படைக்கு விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றை இணைத்துக் கொண்டது. ஆனால் சீனாவால் எவ்வளவு காலம்தான்  ஒரு கடற்போர் அனுபவமற்ற நாடாக இருக்க முடியும்?


Tuesday 1 January 2013

புதிதாக எதை நீ கொண்டுவருவாய்?


பதின்பருவத்திற்கு இந்த நூற்றாண்டை
பத்திரமாய் எடுத்துச் சென்றிட
வரும் பதின்மூன்றே வருக வருக
புதிது என்று உரைக்கின்றனர் உன்னை
புதிதாக எதை நீ கொண்டுவருவாய்

இனக் கொலையாளிகளைக் கூண்டிலேற்றுவாயா - களப்
போராளி நாமென வந்து பிரித்தோரை இனம் காட்டுவாயா
நல்லவர் எவரெனத்தான் சுட்டிக்காட்டுவாயா
 

வரும் பதின்மூன்றே வருக வருக
புதிது என்று உரைக்கின்றனர் உன்னை
புதிதாக எதைத்தான் நீ கொண்டுவருவாய்
சிறையில் வதைபடும் உறவுகளை மீட்ப்பாயா
அடக்குமுறையாளிகளிடமிருந்து விடுவிப்பாயா
கொடியவர் ஆட்சியை ஒழித்துக்கட்டுவாயா


வரும் பதின்மூன்றே வருக வருக
புதிது என்று உரைக்கின்றனர் உன்னை
புதிதாக எதைத்தான் நீ கொண்டுவருவாய்

பாராமுகமும் பாராபட்சமும் நிறைந்த ஐநா
விடுதலைப் போரைப் பயங்கரவாதமென்னும்
பன்னாட்டுப் பன்னாடைக் கூட்டம்
இவ்வாண்டில் மாறிடுமா எம்மினம் தேறிடுமா

வரும் பதின்மூன்றே வருக வருக
புதிது என்று உரைக்கின்றனர் உன்னை
புதிதாக எதைத்தான் நீ கொண்டுவருவாய்

அடுத்துக் கெடுத்து கொன்றொழித்து
மீண்டும் முளைக்காமல் வேரோடழிக்கத்
துடித்து நின்று துரோகம் செய் இந்தியாவை
மாற்றி விடுவாயா மாட்சி தருவாயா

நம்பிக்கையுடன் நாம் திரண்டால்
ஒற்றுமையுடன் நாம் எழுந்தால்
நாளை மலரும் எம் ஈழம்
அதன் பின்னர் மலரும் ஒவ்வொரு நாளும்
புத்தாண்டாகும். புதிதாகும் எம் நிலம்

Monday 31 December 2012

2012இல் நடக்காதவையும் நடந்தவையும்

"நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும்" என்ற வாசகம் 2012இற்க்கு மிகவும் பொருந்தக் கூடியதாக இருந்தது. 2012இல் நடந்தவையை விட நடக்காதவையே பிரபலமானதாக இருந்தது.

2012இல் நடக்காதவை

மாயன் கலண்டர்
2012இல் முக்கியத்துவம் பெற்றிருந்தது மாயன் கலண்டரே. உலகம் அழியும் என்று சிலர் கூவிக் கொண்டே இருந்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒன்றும் நடக்கது என்று சொன்ன அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சும்மா இருக்கவில்லை. உலகையும் வான்வெளியையும் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தது. மாயன் கலண்டர் முடியும் நேரத்தில் சூரியன் வழமைக்கு மாறாக மின்னியதை நாசா அவதானித்தது.

கவிழாத சிரிய அதிபர் அசாத்தின் ஆட்சி
சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி 2012இல் கவிழும் என்று பலர் 2011இல் எதிர்வு கூறினர். இன்று வரை அசாத் ஆட்சியில் இருக்கிறார். சிரியாவில் இதுவரை 44,000பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் பெரும் மோதல் வெடித்து 2013இல் 100,000பேர் கொல்லப்படலாம் என சிரியாவிற்கான சமாதானத் தூதுவர் சொல்கிறார்.

ஈரான் மீது தாக்குதல்
2012இல் இஸ்ரேல் தனித்தோ அல்லது ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தோ ஈரானில் அணு ஆராய்ச்சி நிலையங்கள் மீது பெரும் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டத்து ஆனால் நடக்கவில்லை.

இரசியாவில் புட்டீன் ஆட்சி கவிழும்
அரபு வசந்தம் போல் 2012இல் இரசியாவில் ஒரு மக்கள் எழுச்சி நிகழ்ந்து அங்கு விளாடிமீர் புட்டீனின் ஆட்சி கவிழும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நிகழவில்லை.

பிரித்தானியாவில் ஒலிம்பிக் ஊத்திக்கும்
பிரித்தானியாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஒழுங்காக நடக்காது என்று பலர் எதிர்வு கூறினர். ஆனால் பிரித்தானியா தனக்கே உரிய தனித்துவத்துடன் வெற்றிகரமாக ஒலிப்ம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியது.

2012இல் முக்கிய நிகழ்வுகள்

மியன்மாரில் (பர்மா) தேர்தல்.
பர்மாவில் பல ஆண்டுகளின் பின்னர் மக்களாட்சி முறைமையின் கீழ் தேர்தல் நடந்தது.  ஆங் சான் சூகி தேர்தலில் வெற்றி பெற்றார். சீனாவின் பிடியில் இருந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பர்மாவை அமெரிக்கா விடுவிக்கும் முயற்ச்சியில் முதல் வெற்றி பெற்றுள்ளது எனப்பட்டது.

சீன அமெரிக்க இழுபறி
கண்பார்வையற்றவரும் தானாகவே சட்டம் படித்தவரும் சீனாவில் மனித உரிமைகளிற்கு எதிராக குரல் கொடுத்துவருமான சேன் குவான்சேன் சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதுவர்கத்தில் தஞ்சம் புகுந்தார். இது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு இராசதந்திர முறுகலை உருவாக்கியது. இறுதியில் சேன் குவான்சேன் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் தற்காலிக உறைவிடம் வழங்கப்பட்டது.

தீபெத்தியர்களின் தீக்குழிப்பு அதிகரிப்பு
இந்தியாவிலும் சீனாவிலும் தீபெத்திற்கு விடுதலை வேண்டும் எனப் போராடுவோர்கள் தீக்குழித்துக் கொள்வது அதிகரித்து இருந்தது. சீனாவில் பொது நிகழ்வுகளில் சிறப்புக் காவற்துறையினர் கையில் தீயணை கருவிகளுடன அலைய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

பிரித்தானிய அரசியின் வைரவிழாவிற்கு வந்த மஹிந்த விரட்டப்பட்டார்.
பிரித்தானிய அரசி முடி சூட்டி அறுபது ஆண்டுகள் நிறை வேறிய விழாவிற்கு மஹிந்த ராஜபக்ச சென்றார். அவரை அங்கு பொது நலவாய நாடுகளின் பொருளாதார மாநாட்டில் தொடக்கவுரை ஆற்ற பொது நலவாய நாடுகளில் உயர் பதவியில் உள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்தனர். மஹிந்தவிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் இலண்டனில் நடந்தது. மாநாட்டில் பங்கு பற்றும் நுழைவுச் சீட்டுக்களை ஐம்பது தமிழர்கள் பெற்றிருந்தனர் எனக்கூறப்பட்டது. மாநாட்டில் என்ன நடக்குமோ என்று தெரியாத ஏற்ப்பாட்டாளர்கள் மாநாட்டில் காலை நிகழ்வுகளை இரத்துச் செய்தனர்.

உலக சாதனை படைத்த இந்தியா
உலக வரலாற்றில் மிகப் பெரும் மின்வெட்டு இந்தியாவில் செய்யப்பட்டது. இந்தியாவின் வறுமை நிலைமையையும் மோசமான ஆட்சியையும் உலகம் உணர்ந்து கொண்டது.

முசுலிம்களின் களங்கமின்மை திரைப்பட முன்னோட்டம்
யூடியூப்பில் தரவேற்றப்பட்ட முசுலிம்களின் களங்கமின்மை திரைப்பட முன்னோட்டம் உலகெங்கும் பெரும் கிளர்ச்சிக்கு வித்திட்டது.

இஸ்ரேல் - ஹாமாஸ் மோதல்
இஸ்ரேலும் ஹாமாஸ் இயக்கமும் கடும் மோதலில் ஈடுபட்டன. பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ஏவுகணை எதிர்ப்புக் கூரை போரில் பாவிக்கப்பட்டது.

எகிப்தில் மொஹமட் மோர்சி

எகிப்தில் மொஹமட் மோர்சி தனது அதிகாரத்தைத் திடப்படுத்திக் கொண்டார். அவரது மதசார்ப்புக் கொள்கைக்கு உருவான எதிர்ப்புக்கு மத்தியிலும் அவர் தனது அரசமைப்புயாப்பை நிறைவேற்றும் பணியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய அழைப்பு நிலையங்களின் (call center) வீழ்ச்சி
இந்தியாவில் அதிகரித்து வந்த வெளிநாட்டு நிறுவனங்களின் அழைப்பு நிலையங்கள் 2012இல் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. பிரேசில், மெக்சிக்கோ, வியட்னாம் மற்றும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் களத்தில் இறங்கியதும் இந்தியாவில் சில முறைகேடுகள் நடந்ததும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாகியது.

சீனாவின் எல்லைப் பிரச்சனை
உலக அமைதிக்கு பெரும் சவாலாக அமைந்தது சீனாவிற்கும் அதல் அயல் நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை. அருணாச்சலப் பிரதேசத்தை தனது நாட்டு வரைபடத்துடன் இணைத்து சீனா தனது கடவுச்சீட்டில் பதிவு செய்து சர்ச்சையைக் கிளப்பியது. தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுகளை தனக்குச் சொந்தமானது என்று அழுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் ஜப்பான், தென் கொரியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்வான் போன்ற நாடுகளுடன் சீனா பெரும் முறுகல் நிலை உருவாக்கியுள்ளது, 2013இல் உலகின் கவனத்தை தென் சீனக் கடல் ஈர்க்கும்.



Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...